தமிழ்நாட்டில் கால்நடைகள் அவ்வப்போது பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். கால்நடைகளை வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அதி நவீன வசதிகளுடன் கூடிய இலவச நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகன சேவையை 22 மாவட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அறிமுகப்படுத்தியது.




இந்த வாகனத்தில் கால்நடைகள் சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நவீன கருவி கள், ரத்தம், சிறுநீா் மூலம் நோய் கண்டறியும் சிறிய அளவிலான லேப் வசதியும் உள்ளது. ஆம்புலன்ஸ் செல்ல முடியாத இடங்களில் இருந்து கால்நடைகளை எடுத்து வரும் வகையில் நவீன தள்ளுவண்டி மற்றும் உயா் சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டு வரும் வகையில் ஹைட்ராலிக் லிப்ட் மற்றும் இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க வசதியாக அதிக ஒளி உள்ள மின் விளக்குகளுடன் ஜெனரேட்டா், யுபிஎஸ் வசதியுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.




இந்த வாகனத்தில் மருத்துவா், ஒரு உதவியாளா்கள், ஓட்டுநா் என மூன்று போ் பணியாற்றும் கின்றனர். 1962 என்ற எண்ணில் அழைத்தால் நேரடியாக கால்நடை இருக்கும் இடத்துக்கே சென்று சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இந்த சேவை  முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் கூட தொய்வின்றி சிறப்பாக இயங்கி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றன.




இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று தனது மாட்டின் கொம்பு விபத்தில் உடைந்த தாகும், இதனால் ரத்தம் சொட்டிய நிலையில் தனது மாடு அவதியுற்ற நிலையில், ஊரடங்கு மற்றும் காணும் பொங்கல் என்பதால் தனியார் கால்நடை மருத்துவர்கள் வர மறுத்து விட்டனர். இதனை அடுத்து அரசு அறிவித்துள்ள 1962 என்ற எண்ணை பற்றி நண்பர் ஒருவர் கூறியதை அடுத்து அதனை தொடர்பு கொண்டதாகவும், தொடர்பு கொண்ட சில மணி நேரத்தில் இலவச கால்நடை மருத்துவ வாகனம் வீட்டிற்கே நேரடியாக வந்து விபத்தில் கொம்பு உடைந்த மாட்டிக்கு மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்து சென்றனர். மேலும் இந்த சேவை குறித்து விவசாயிகள் பலர் முழுமையாக தெரியாமல் இருப்பதாகவும், இதனை அனைத்து பாமர விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.




மேலும் மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் கூறுகையில், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாகவும், தங்கள் மருத்துவ வாகனம் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தற்போது இயங்கி வருவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான தனி கால்நடை மருத்துவ வாகனம் இல்லை என்றும், மயிலாடுதுறையில் தனி வாகனம் இருக்கும்பட்சத்தில் இன்னும் விரைவாக தாங்கள் வந்து சேவை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.




நடமாடும் கால்நடை மருத்துவ குழுவினரும் சேவையை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு என தனி  கால்நடை மருத்துவ வாகனம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என தனி வாகனம் இல்லை எனவும், இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து அவசர உதவி உரிய நேரத்தில் இந்த மருத்துவ வாகனம் வருவதில் சிக்கல் உள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என தனி கால்நடை மருத்துவ வாகனத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி விவசாயிகளின் உற்ற நண்பனான கால்நடைகளை பாதுகாக்க உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.