தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.
இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூச விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளின்ர். அன்றிரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்றது.
இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக 13-ம் தேதி இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை நாலு முப்பது மணிக்கு மூலவரான சுவாமி சுவாமி நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இன்று மாலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ள வஜ்ர தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரியும் அதனைத் தொடர்ந்து இரவு கொடி இறக்கமும் செய்யப்பட உள்ளது.
வழக்கமாக தைப்பூசத் திருநாளன்று சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் காவிரி ஆற்றுக்கு புறப்பட்டு அங்கே தீர்த்தவாரி கண்டு அருளும் நிகழும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும் வழக்கம்.ஆனால் கொரனோ வழிகாட்டு நெறிமுறைகள் நடை முறையில் இருப்பதால் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் எளிய முறையில் தீர்த்தவாரி நடக்கிறது.
தமிழக அரசு இன்று கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இன்று காலை முதல் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் கோயில் கோபுரத்தின் அருகே நின்று தரிசனம் செய்து, வாசலில் விளக்கேற்றி, சூடம் ஏற்றியும் தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். ஏராளமானோர் மொட்டை அடித்தும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.