தமிழ்நாட்டின் கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய நகரமாகும். வர்த்தக நிறுவனங்களான மொத்தம், சில்லரை வணிகளும் அதிகஅளவில் நடைபெறக்கூடிய நகரமாகும். தமிழகத்தில்  உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது.


அதே போல் தஞ்சை மாவட்டத்திலேயே வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. காவிரி - அரசலாறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர்.



1866 ஆம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949ஆம் ஆண்டில் இருந்து முதல் நிலையாகவும், 1974ஆம் ஆண்டில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998ஆம் ஆண்டில் இருந்து முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் மூன்று மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து புதை சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான தென்னகத்தின் கேம் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு ஆடவர் கல்லுாரியும் இயங்கி வருகிறது.


கும்பகோணம் நகரம் வரலாற்று சிறப்புகளையும், பல அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பெருமையையும் கொண்டது. கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் போன்ற உலகப்புகழ் பெற்றவர்கள் படித்த பள்ளியாகும், சாரங்கபாணி சன்னதி தெருவிலிருக்கும் யானையடி தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் படித்தனர். கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 2013ஆம் ஆண்டே நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.



தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணமும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஓரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகளாக இடம்பெற்றது. இதன் மூலம் கும்பகோணம் விரைவில் தனிமாவட்டமாக உருவாகும் என கும்பகோணம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், கும்பகோணம் மற்றும் சுற்றிலும் உள்ள 3 பேரூராட்சிகள், 17 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என்பது குறித்து உத்தேசபட்டியல், தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், கும்பகோணம் நகராட்சிப்பகுதியின் தற்போதைய மொத்த பரப்பளவு 12.58 சதுர கிலோமீட்டராகும். ஆண்டு வருமானம் சுமார் ரூ.43.25 கோடியாகும். கும்பகோணம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், கும்பகோணத்தை அடுத்த தாராசுரம், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், திருவலஞ்சுழி, வலையப்பேட்டை, அம்மாசத்திரம், அண்ணலக்கிரஹாரம், பாபுராஜபுரம், அசூர், பழவத்தான்கட்டளை, கொரநாட்டுக்கரூப்பூர், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநால்லுார், பட்டீஸ்வரம்,சோழன்மாளிகை, சீனிவாசநல்லுார், ஏராகரம் ஆகிய 17 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவதின் மூலம், மொத்த பரப்பளவு 74.87 சதுர கிலோ மீட்டராகவும், ஆண்டு வருமானம் 54.37 கோடியாகும் என பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் போராடி வந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன் ஆகியோரது தலைமையில் திமுகவினர் உச்சிபிள்ளையார்கோயில் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து குடந்தை அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் கூறுகையில்,



பாரம்பரிய, கலாச்சார, தொன்மை வாய்ந்த நகரமான கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம், தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விரைவில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மக.ஸ்டாலின் கூறுகையில்,


கும்பகோணத்தை மாநகராட்சியாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வாழ்த்துக்கின்றோம், மகிழ்ச்சியடைகின்றோம். வரவேற்கின்றோம், ஆனால் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக விரைவில்  அறிவிப்பார். கடந்த அதிமுக ஆட்சியில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கூறி, மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தார்கள். திமுக ஆட்சியில் கும்பகோணத்தை புதிய மாவட்ட அறிவித்து, இப்பகுதி மக்களின் வயிற்றில் பாலை வார்ப்பார் என எதிர்ப்பாக்கின்றோம். பல ஆண்டுகளாக மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தாலும், தமிழக அரசு, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.



தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைத்தவுடன் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் பேசினார். ஆனால் சில நிர்வாக காரணங்கள் இருப்பதால், மாவட்டமாக அறிவிக்க காலதாமதாகின்றது. கும்பகோணம் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று இன்னும் 100 நாட்களில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். நாங்கள் நடத்தும் போராட்டங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்று, மாவட்டமாக அறிவிக்கும் வரை ஒயாது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து ஆலோசித்து போராட்டம் அறிவிக்கபடும் என்றார்.