நாகையில் மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுகுடி முருகன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தமிழக அரசு கடந்த ஜனவரி 6ஆம் தேதி புதிய ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபாட்டு தடை, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கொராணா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில் தளர்வு குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது இதில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட அனுமதி அளித்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற முக்கிய வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோவில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலன் ஆலயம், நீலாயதாட்சி அம்மன் ஆலயம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் சானிடைசர் பயன்பாட்டிற்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் நாகூர் ஆண்டவர் தர்காவில் அனைத்து பகுதிகளையும் பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்த பின்பு தர்காவிற்கு வருபவர்களை அனுமதித்து வருகின்றனர். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே குறைந்த அளவில் வந்து செல்வதால் அங்கு வெறிச்சோடி காணப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தலங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்தால் மட்டுமே தங்களுக்கு வியாபாரம் நடப்பதாக தெரிவிக்கும் வணிகர்கள் தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள தவறுகளால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து தங்களுக்கு நல்ல வியாபாரம் நடந்து வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.