அரியலூரில் மாணவி தற்கொலை விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஏற்கனவே தனது சித்தியின் மூலம் கொடுமை இருந்து வந்ததாகத் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. 


 தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூர் மாணவி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி விடுதி காப்பாளரே காரணம் எனப் புகார் எழுந்தது. மேலும், மதம் மாறக் கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதனை மறுத்த மாணவி தற்கொலை செய்ததாகவும் பாஜக தரப்பில் கூறியதால் புதிய சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இறந்த மாணவிக்குத் தனது சித்தியின் மூலம் கொடுமை நிகழ்ந்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 



கடந்த 2020ஆம் ஆண்டு, இறந்த மாணவியிடம் இருந்து தனது சித்தியின் கொடுமை தாங்க முடியவில்லை என்று குழந்தைகள் நலனிற்கான ஹெல்ப்லைன் எண் 1098க்கு அழைப்பு வந்ததாகவும், விசாரணையின் போது மாணவி சித்தியால் கொடுமை செய்யப்படவில்லை என அம்மாணவி அதிகாரிகளிடம் கூறியதாகவும் குழந்தைகள் நல ஆணையத்திடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், மாணவிக்கும் அவரது சித்திக்கும் சைல்ட் ஹெல்ப் லைன் உறுப்பினரிடம் இருந்து மன ரீதியான கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


மாணவியிடம் அப்போது விசாரணை நடத்திய திருமானூர் சைல்ட் ஹெல்ப் லைன் உறுப்பினர், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து, சீல் வைக்கப்பட்ட கவரில் அந்த அறிக்கையை அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார். இந்த அறிக்கை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அரியலூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும், மாணவி பேசிய புது வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி விடுதி காப்பாளர் தனக்கு வேலைகள் செய்யச்சொல்லி வற்புறுத்தியதாகக் கூறிய மாணவி, பொட்டு வைக்கக்கூடாது என சொன்னார்களா என்னும் கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளதைப் பார்க்கமுடிகிறது