தஞ்சாவூர்: பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு 2 மகள், 1 மகன். இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதா (15). கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. பள்ளி முடிந்ததால் வழக்கம்போல் சுஷ்மிதாவும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.

அந்த நேரத்தில் பலத்த காற்று வீசியதால் பள்ளி வளாகத்தில் இருந்த தூங்கு மூஞ்சி மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதா, ராஜேஸ்வரி ஆகியோர் மீது விழுந்தது. இருவரும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஷ்மிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த நிலையில் ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து நிவாரண உதவியும் அறிவித்தார். மாணவி சுஷ்மிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவி ராஜேஸ்வரியை மாவட்ட கலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், முதல்வரின் நிவாரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் பெற்றோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர்  தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமையப்பெற்றுள்ள 300 படுக்கை வசதிகொண்ட சிகிச்சை அறையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.  நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், முதன்மை கல்வி அலுவலர்  மதன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.