திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் நெமிலிக்குடி ஊராட்சி வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார், ஷேக் அப்துல்லா,  நடனசிகாமணி, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல்ராஜ், மதியழகன். இவர்கள் அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்கி அதனைத் தங்களுடைய அலைபேசி அழைப்பு மற்றும் இணையதள சேவைத் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தங்களுடைய கிராமங்களான குளவேலி மற்றும் அது சார்ந்த பகுதிகளில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை, வீட்டுக்குள் இருக்கும்போது குறைந்த அளவே கிடைப்பதாகவும் பல நேரங்களில் முற்றிலும் கிடைப்பதில்லை, இதனால் சரிவர செல்போன் அழைப்புகள் பேச முடிவதில்லை 4ஜி மற்றும் 5ஜி அதிவேக இணையதள சேவைகள் சரிவர கிடைப்பதில்லை, இதனால் இணையதள சேவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தங்களில் பலர் இணையதளய சேவையை நம்பியே தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருவதாகவும் அது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இமெயில் மூலம் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்துள்ளனர்.


மேலும் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளை அழைத்து புகார்கள் கூறிவந்துள்ளனர். நிறுவனத்தின் சார்பில் தங்களுடைய நிறுவனத்தின் நெட்வொர்க் கவரேஜ் குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருப்பதாகவும் அந்த சேவை குறிப்பிட்ட காலத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் நெட் வெலாசிட்டி என்ற இணைய செயலி ஒன்றின் மூலம் ஜியோ நிறுவனத்தின் இணையதள வேகத்தை சோதித்து பார்த்துள்ளனர். அதில் இணையவேகம் மிக குறைவாகவே காட்டியுள்ளது. இதனை ஜியோ நிறுவனத்திற்கு தெரிவித்த போது குறிப்பிட்ட காலத்திற்குள் இனிய சேவை மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் அதன்படி மேம்படுத்தவில்லை. தொடர்ந்து பாதிப்புகள் இருந்த வண்ணமே இருந்ததால் கடந்த மே மாதம் இவர்கள் அனைவரும் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் நேற்று வழங்கிய தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஜியோ நிறுவனம் இணையதள சேவை மற்றும் இணைய வேகம் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் தங்களது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது மற்றும் புகார்தாரர்கள் தங்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை 9% ஆண்டு வட்டியுடன் திரும்பத்தர வேண்டும், புகார்தாரருடைய மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூபாய் 20,000/- மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- வீதம் 30 நாட்களுக்குள் வழங்குமாறு ஜியோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்