தஞ்சாவூர்: வாழவும் வைக்கும்… வேதனையை ஏற்படுத்தி வழுக்கி விடவும் செய்யும் வாழையை மனதார பிரியத்துடன் பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு அதன் ஒவ்வொரு பொருளும் வருமானத்தை தரக்கூடியதுதான். மழைக்காலத்தில் வருமானமின்றி தவிக்கும் இத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


நவீன காலத்திலும் மவுசு குறையாத வாழை நார்


வாழையில் எதுவுமே பயன்படாதது என தூக்கி எறிய முடியாது. வாழைப்பழம், இலை, வாழைப் பூ, வாழைத் தண்டு உள்ளிட்டவை மட்டுமல்லாமல், கடைசியாக மட்டையில் கூட நார் உறித்து வருவாய் ஈட்டலாம். பூக்கள், மாலை கட்டுவதற்குப் பயன்படும் வாழை நார்களுக்கு இந்த நவீன யுகத்திலும் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. நான் என்றைக்கும் மவுசு குறையவே மாட்டேன் என்று மார்தட்டிக் கொள்ளலாம் வாழை நார். அந்தளவிற்கு இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாழை நாரை பொருத்தவரை பூவன் ரக மரத்திலிருந்து கிடைப்பதுதான் வெண்மையாக இருக்கும். மற்ற ரக மரங்களில் இந்த அளவுக்கு வெள்ளையாக இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.




பூவன் ரக மரத்தின் நார் தரமாக இருக்கும்


இந்த பூவன் ரகம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி வட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பூவன் ரக மரத்தில்தான் நார் வெள்ளையாக மட்டுமல்லாமல், உறுதியாகவும், தரமாகவும், பூ, மாலை கட்டுவதற்கு வசதியாகவும் இருக்கும். எனவே, திருவையாறு  வட்டாரங்களில் கிடைக்கும் வாழை நாருக்கு வரவேற்பு அதிகம்.


இதனால், திருவையாறு அருகே ஆச்சனூரில் தொடங்கி வடுகக்குடி, வளப்பக்குடி, வைத்தியநாதன்பேட்டை, உத்தமனூர், கோவிலடி வரையிலான கிராமங்களிலுள்ள வாழை தோட்டங்களில் வாழைத்தார், வாழை இலை தவிர வாழை நாருக்கும் தனியாக குத்தகைக்கு விடப்படுகிறது. இப்படி நன்கு வாழ வைக்கும் வாழை கனமழையோ, பெரும் காற்றோ வீசினால் அவ்வளவுதான் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி விடும். இருப்பினும் இந்த வாழையை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர் விவசாயிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


வாழை நாரை நம்பி வாழும் தொழிலாளர்கள்


வாழை மட்டையிலிருந்து எடுக்கப்படும் வாழை நாரை நம்பி திருவையாறு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, திருவாலம்பொழில் ஆகிய கிராமங்களில் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வாழை மரங்களை வெட்டி, மட்டையை உரித்து, நாராகக் கிழிக்கப்படுகிறது. இதன் மூலம் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் குத்தகை தொகை கிடைக்கிறது. குத்தகைதாரருக்கு வாழை மரங்களை வெட்டி உடைத்து, நாராக உரிப்பது உள்ளிட்டவற்றுக்கு மொத்தத்தில் ரூ. 60 ஆயிரம் செலவாகிறது. இதன் மூலம், ஏக்கருக்கு செலவுகள் போக ரூ. 40 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது என்றனர் வாழை நார் குத்தகைதாரர்கள்.


பல மாவட்டங்களுக்கும் பயணமாகும் வாழை நார்


திருவையாறு, பூதலூர் வட்டங்களிலிருந்து திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாள்தோறும் 500 கட்டு நார்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.


இதுகுறித்து வாழை நார் குத்தகைதாரர்கள் தரப்பில் கூறுகையில், திருவையாறு, பூதலூர் வட்டங்களில் வாழை நார் குத்தகை மட்டும் 25 பேர் எடுத்து செய்து வருகிறோம். ஒவ்வொரு குத்தகைதாரரிடமும் 15 முதல் 25 பேர் வேலை செய்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வாழை நாருக்கான வேலை இருக்கும். வாழைத்தார், இலை அறுவடை செய்யப்பட்ட பிறகு வாழை நார் எடுப்பதற்கு தனியாக குத்தகைக்கு விடப்படுகிறது.


வாழை மரங்களை வெட்டி, மட்டைகள் உரிக்கப்படும். ஒரு மரத்துக்கு சராசரியாக 30 மட்டைகள் கிடைக்கும். இதைக் கட்டு கட்டி, வீட்டுக்கு கொண்டு சென்று நாராக உறிப்போம். இதை ஆயிரம் நார்கள் கொண்ட கட்டாகக் கட்டுவோம். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் தலா ரூ. 500 கூலி கிடைக்கிறது. இந்தத் தொழில் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளர்களை வாழ வைக்கிறது. ஆனால், மழை பெய்யாமல் வாழை மட்டைகள் நன்கு காய்ந்து இருந்தால்தான் நார் வெள்ளையாகக் கிடைக்கும். மழை பெய்தால் வாழை மட்டைகள் கருகிவிடும். இதிலிருந்து கிடைக்கும் நாருக்கு விலை கிடைக்காது என்றனர்.


அரசு கவனிக்குமா... தொழிலாளர்களுக்கு உதவி கிடைக்குமா?


வாழை உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். மதியழகன் கூறுகையில்,  தொடர் மழை பெய்தால் இத்தொழில் முற்றிலும் பாதிக்கும். இதேபோல, வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. எனவே, வாழை நார் தொழிலில் லாபம் இருப்பதுபோல, நஷ்டமும் இருக்கிறது. ஒரு கட்டு நார் ரூ. 700 முதல் ரூ. 1,500 வரை விற்பனையாகும். ஆடி மாதம் முதல் தை மாதம் வரை நார் விற்பனை நன்றாக இருக்கும். 


குறிப்பாக சபரிமலைக்கு மாலை போடும் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பூ, மாலைகள் அதிக அளவில் கட்டி விற்கப்படுவதால், வாழை நாருக்கான தேவையும் உச்சத்தை எட்டும். அப்போது, ஒரு கட்டு ரூ. ஆயிரத்து 300 முதல் ரூ. ஆயிரத்து 500 வரை விலை போகும். வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலை இருக்காது. மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல, வாழை நார் தொழிலாளர்களுக்கும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைக்கால நிவாரணமாக மாதத்துக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஒட்டுமொத்தமாக வாழை தொழிலாளர்களுக்காகத் தனியாக நல வாரியம் அமைத்து ஆயுள் காப்பீடு உள்ளிட்ட உதவிகளை அரசு செய்து தர முன்வர வேண்டும் என்றார்.