வங்கி கணக்கில் இருந்து கூடுதல் தொகையை விடுவித்ததற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அகரவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் தனது மகன் ரமேஷ் என்பவருக்கு திருவாரூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும் சி.ஏ மோட்டார்ஸ் என்கிற நிறுவனத்தில் ஆக்டிவா 5 ஜி என்கிற ரூ.72,910 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை 25.02.2019 ல் வாங்கியுள்ளார்.  இந்த இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கான கடன் தொகை பெற சி.ஏ மோட்டார்ஸ் நிறுவனம் அருகில் உள்ள இன்டஸ்இன்ட் வங்கிக்கு வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இன்டஸ்இன்ட் வங்கி சுசீலா பெயரில் 58,750 ரூபாய் கடன் தர முன் வந்துள்ளது. இதற்கு மாதத் தவணையாக 3889 ரூபாய் சுசீலா செலுத்த வேண்டும் என்று வங்கி தரப்பிடமிருந்து கையொப்பம் பெறப்பட்டுள்ளது. சுசீலா அரிச்சந்திரபுரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையின் நீண்ட நாள் வாடிக்கையாளர் ஆவார். எனவே அந்த வங்கிக் கணக்கில் இருந்து மாதம் தோறும் 7 ஆம் தேதி தவணைத் தொகையைப் பிடித்துக் கொள்ள சுசீலா அனுமதி அளித்துள்ளார். ஆனால் இன்டஸ்இன்ட் வங்கி தவணைத் தொகையுடன் சேர்த்து கூடுதல் தொகையை மாதந்தோறும் சுசீலாவின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சேமிப்பி கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையும் அனுமதிப்பட்டதை விட கூடுதல் தொகையினை இன்டஸ்இன்ட் வாங்கிக்கு விடுவித்துள்ளது. இவ்வாறு சுசீலாவின் சேமிப்பு வங்கி கணக்கு பதிவின் படி இன்டஸ்இன்ட் வங்கி கூடுதலாக 14613 ரூபாயை  வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.




இதனைத் தொடர்ந்து சுசீலா இறுதி மாத தவணைத் தொகையை கூடுதலாக பிடித்தும் செய்த தொகையிலிருந்து கழித்து விட்டு மீதமுள்ள தொகையை கொடுக்கும் படியும் மேலும் இருசக்கர வாகனத்தின் அசல் ஆவணங்கள் மற்றும் சாவியினை ஒப்படைக்கு மாறும் கேட்டுள்ளார். இதற்கு இன்டஸ்இன்ட் வங்கி தரப்பில் கடைசி மாத தவணையை கட்டி முடிக்குமாறும், கடன் முழுவதும் கட்டி முடித்தவுடன் கூடுதலாக பிடித்த தொகையினை தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதற்கு சுசீலா ஏற்கனவே நீங்கள் கூடுதலாக பிடித்திருப்பதால் அதில் நேர் செய்துவிட்டு ரசீதை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு வங்கி நிர்வாகம் உரிய பதில் ஏதும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 02.01.2021 இல் இன்டஸ் இன்ட் வங்கி சுசீலாவிற்கு 15687 ரூபாய் பாக்கி இருப்பதாகும் அதனை உடனே கட்ட வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தகவல்களைக் கொண்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சுசீலா 06.02.2021 இல் கூடுதலான தொகை பிடித்தது குறித்து கூறியும் அதற்கு சரியான விளக்கம் அளிக்கும்படி கோரியும் கணக்கு சரியாக விளக்கப்பட்டால் தவணைத் தொகையை முழுவதுமாக கட்டி கணக்கை முடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணையத்திடம் கடனை சமரசமாக முடிப்பதற்கு மனு கொடுத்தும், பலமுறை நேரில் சென்றும் வழக்கறிஞர் மூலம் தொடர்பு கொண்டும் உரிய பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவருக்கு ஏற்பட்ட அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு இன்டஸ்இன்ட் வங்கி இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், பாரத ஸ்டேட் வங்கி கிளை இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க கோரி கடந்த 26.7.2021 இல் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் அளிக்காததால் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 




இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்யலெட்சுமி அடங்கிய அமர்வு புகார்தாரர் தனது வங்கி கணக்கில் தவணைத் தொகையை விட கூடுதலாக ஒவ்வொரு மாதமும் பணம் வைத்திருந்த போதும் புகார்தாரின் அனுமதி இன்றி அவரது வங்கி கணக்கில் இருந்து வேண்டுமென்றே பல நாட்களாக பிடித்தம் செய்த தொகையான 14,613 ரூபாயை எந்த ஒரு கணக்குமின்றி அவரது வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது.  இதன் காரணமாக வங்கிகள் புகார்தாரருக்கு சேவை குறைபாடு செய்துள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் அதனை எதிர்த்தரப்பினர் பெற்றுக் கொண்டு எந்த பதிலறிவிப்பும் கொடுக்காமலும் புகார்தாரர் வங்கி கணக்கிலிருந்து அதிகப்படியாக 14 ஆயிரத்து 613 ரூபாய் பிடித்ததை திருப்பி செலுத்தாமலும் அதைப் பற்றி எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்துள்ளதால் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது. எனவே கூடுதலாக பிடிக்கப்பட்ட 14,613 ரூபாயை எதிர்தரப்பினர்கள் தனித்தோ அல்லது சேர்ந்தோ இந்த மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து 9% வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் புகார்தருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 1 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் புகார்தாரரின் இந்த வழக்கு செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என்றும் இது ஆணையம் உத்தரவிடுகிறது. மேலும் இந்த தொகையினை இந்த உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 6 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண