கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1.44 லட்சம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் நீரில் மூழ்கி பாதிப்பு அடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை அடுத்த கோவிந்தநாட்டுச்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் சூழ்ந்து மூழ்கி உள்ள வாழை, மிளகாய் பயிர்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நீரில் மூழ்கிய பயிர்களின் விவரங்களை விவசாயிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களை ஆய்வு செய்து வருகிறார். அப்போது அவர் கூறும் போது: வெள்ளப்பெருக்கு குறைந்த உடன் பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து விடும். அதன் பிறகு தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும். அதனை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும். பின்னர் சேத விவரங்கள் கலெக்டர் மூலம் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பப்படும் என்றார்.





இந்த ஆய்வின் போது பாபநாசம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகன், துணை தோட்டக்கலை அலுவலர் ரவி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள் காந்தி, வரதராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் மா, வாழை, தக்காளி, வெண்டை, கத்தரி, முள்ளங்கி, கொடிகாய்கறிகள், மரவள்ளி, மஞ்சள், ரோஜா, மல்லிகை, சாமந்தி, வெற்றிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பயிர்களாகும். உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளிடையே உயர் உற்பத்தி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய பசுமைக்குடில், நிழல்வலைக்கூடாரம், நிலப்போர்வை, அதிக மகசூல் தரக்கூடிய காய்கறி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட அதிகளவு தண்ணீரால் தோட்டக்கலைப்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. தற்போதைய நிலையில் தண்ணீர் வடிந்தவுடன் பாதித்த பயிர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண