தஞ்சாவூர்: பார்த்தியா என்னமா துள்ளிச்சு... மின்னலாட்டம் ஓடிச்சு என்று வடக்கூர் முழுவதும் ஒரே பேச்சுதான். அந்த பேச்சு அந்த கிராமத்தை வலம் வந்த கலைமான் பற்றியதுதான். தஞ்சை மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் கலைமான் ஒன்று கிராமத்தின் தெருக்களில் புகுந்து ஓடியுள்ளது. மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாமாயில் மர தோப்புப்பகுதியில் இந்த கலைமான் நின்றதை பார்த்த கிராம இளைஞர்கள் சில அதை வீடியோவாக எடுத்துள்ளனர். 


புள்ளி மான்கள் உலா வந்ததாக பேச்சு


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  பாச்சூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புள்ளிமான் ஓடியதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். ஒன்றல்ல இன்னும் சில மான்கள் ஓடின என்றும் அப்போது மக்கள் பரவலாக பேசிக் கொண்டனர். இது வதந்தியா என்றும் சிலர் சந்தேக கேள்வி எழுப்பினர். ஒரத்தநாடு அருகே திருவோணம், ரெகுநாதபுரம் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதிகளாகும். இங்கு காப்புக்காடுகள் உள்ளன. இதில் காட்டுப்பூனை, முயல் உட்பட சிறிய விலங்கினங்கள் உள்ளன.


உணவு, தண்ணீர் தேடி நகர் பகுதிக்கு வரும் விலங்கினங்கள்


ஆனால் மான் உட்பட பெரிய  விலங்கினங்கள் இப்பகுதியில் தென்பட்டதில்லை. தற்போது காலநிலை மாறுபாட்டால் தண்ணீர், உணவு தேடி காட்டு விலங்குகள் நகர் பகுதிக்குள் வருவது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்து பொதுமக்கள் அச்சம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 




கொம்புகளுடன் கூடிய மான் துள்ளியோடியது


இந்நிலையில் பாச்சூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் இன்று காலை கொம்புகளுடன் கூடிய மான் ஒன்று தெருக்களிலும், விவசாய நிலத்திலும், பாமாயில் தோப்பு பகுதியும் உலா வந்துள்ளது. வயல்களில் துள்ளிக் குதித்து மின்னல் வேகத்தில் ஓடியுள்ளது. இது பாமாயின் தோப்பு பகுதியில் உலா வந்ததை பார்த்த கிராம இளைஞர்கள் சிலர் இதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அருகில் செல்ல முடியாத நிலையில் தூரத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 


கொம்புகளுடனும், உடலில் புள்ளிகளுடனும் காணப்படும் இந்த மானை பார்த்தவர்கள் இது கலைமான் காட்டுப்பகுதியில்தான் இருக்கும். தண்ணீர் மற்றும் உணவு தேடி இப்படி நகர் பகுதியிலும், கிராம பகுதியிலும் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


காப்புக்காடுகள் பகுதியில் இருந்து வந்து இருக்கலாம்


இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் கிராமத்தை சுற்றியும் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் தரிசு நிலப் பகுதியில் மண்டி கிடக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் கோரைப் புற்கள் அதிகம் உள்ளது. இதனால் கிராமத்தை சுற்றி காடு போல இவை  காட்சியளிக்கின்றன. இந்த மான் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இதற்கு முன்னர் எங்கள் கிராமத்தில் இது போன்ற நிகழ்வும் நடந்ததில்லை. தற்போது கடந்த சில நாட்களாக இந்த புள்ளிமான் கிராமத்தைச் சுற்றிலும் வலம் வருகிறது. புதுக்கோட்டை காப்புக் காடுகள் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்து இருக்கலாம். இந்த மான் தெரு நாய்களிடம் சிக்கிக் கொள்ள கூடாது. 


எனவே வனத்துறையினர் இந்த மானை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.