தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில்வே வழித்தடத்தை அறிவித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று புதுடெல்லியில் ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி., முரசொலி நேரில் சந்திப்பு
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி ரயில்வே துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை நேரில் சந்தித்து தஞ்சாவூர்- சென்னை இடையே புதிய ரயில் வசதியை தொடங்க வேண்டும். திருச்சி திருவனந்தபுரம், திருச்சி ஹௌரா மற்றும் திருச்சி பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம் செங்கோட்டை மற்றும் செகந்திராபாத் ராமநாதபுரம் விரைவு வண்டிகளை பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்தில் புதிய நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
செந்தூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்
செந்தூர் விரைவு வண்டி இரு திசைகளிலும் பூதலூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். அரியலூர் - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை ஆகிய மூன்று புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் சென்னை எக்மோர் காரைக்குடி இடையிலான கம்பன் விரைவு வண்டியை மீண்டும் இயக்குவதற்கும், தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டியை வாரம் 7 நாட்கள் இயக்கவும் கோரிக்கை விடுத்தார். துறை தலைவரும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.
விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் சந்திப்பு
மேலும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் சந்தித்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி அளித்துள்ள மனுவில் தஞ்சாவூர் பயணிகள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.
தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது. தன்செய் என்றால் குளிர்ந்த நிலப்பரப்பு என்று பொருள். தஞ்சாவூர் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கடந்தது. ஆதாரப்பூர்வம் என்றால், திருச்சிராப்பள்ளிக் குன்றில் உள்ள குகைத் தளத்தில் தஞ்சாவூர் பற்றிய குறிப்பு வருகிறது. காலம் கி.பி. 600 ஆகும்.
பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு மன்னர்களும் ஆண்ட பூமி தஞ்சாவூர். இன்றைய நவீன தஞ்சையை வடிவமைத்தவர் விஜயாலயச் சோழன். அவருடைய காலத்தில் தொடங்கி, ராஜராஜனின் மகனான ராஜேந்திரனின் காலம் வரை (கி.பி. 850-1024) சோழர்களின் தலைநகரமாக இருந்தது தஞ்சாவூர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக தஞ்சை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் முரசொலி மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.