மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிவருபவர் சரவணன். இவர் ஆளுங்கட்சியினரின் அழுத்தம்  காரணமாக 60 நாட்கள் ஈட்டா விடுப்பில் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: ஆளுங்கட்சியினர் செய்யாத வேலைகளையும் சேர்த்து ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுத்தாகவும், மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறியுள்ளதாகவும், சூரிய மின் விளக்கு வைப்பதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அஜந்தாவில் இல்லாத தீர்மானங்களை நிறைவேற்றியதாக அதிகாரியை கையெழுத்துப் போடச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கூறி, விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை தான் ரத்து செய்தாகவும்,  தனக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் காரணமாக சரிவர வேலை செய்ய முடியவில்லை என்றும், இதன் காரணமாக தனக்கு இயற்கை அல்லது செயற்கையாக ஆளும் கட்சியினரால் மரணம் ஏற்படலாம் என்றும், எனவே 60 நாட்கள் ஈட்டா விடுப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக அரசு அலுவலர் ஒருவர் நீண்டகால விடுப்பில் செல்லவதாக கடிதம் எழுதியுள்ள சம்பவம்  மயிலாடுதுறை அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் விடுப்பில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மேடைமீது துணைத்தலைவர் அமர்வதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டு சர்ச்சையில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் துணைத் தலைவர் முருகப்பா ஆகியோரிடையே ஏற்பட்ட  திமுக கோஷ்டி மோதல் இருந்து வருவதாகவும், இதன் காரணமாகவே அதிகாரிகள் மட்டத்தில் இது பிரச்சனை எதிரொலித்து வைத்துள்ளதாகவும் இதன் காரணமாக இருந்த வரும் தொடர் பிரச்சினையால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆட்சியருக்கு கடிதம் எழுதிவிட்டு விடுப்பில் சென்றதால் கூறப்படுகிறது.




இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எந்த ஒரு ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சிலர் அரசு அதிகாரிகளிடம் தாங்கள் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக செயல்பட வைப்பதும், அவ்வாறு தங்களுக்கு சாதகமாக செயல்படாத அரசு அதிகாரிகளை மறைமுகமாக பல இன்னல்களை கொடுக்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்தேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை கட்சித் தலைமை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளும் கட்சியினருக்கு பெரும் அவப்பெயர் உண்டாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.