தஞ்சாவூர்: இரட்டை ரசீது முறையை ஒழிக்கக் கோரி தமிழகத்தில் நியாய விலைக் கடை பணியாளர்கள் வரும் மே 4 ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.



தஞ்சாவூரில் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கு. பாலசுப்பிரமணியம் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
 
கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஏற்றுக்கொண்டபடி, பதவி உயர்வுகள், இடமாறுதல்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் அளித்து விட்டுதான் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசும், உயர் அலுவலர்களும் கூறியும், அப்பணிகள் முறையாக நடைபெறவில்லை.


நியாய விலைக்கடைகளில் மத்திய அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு ரசீதும், மாநில அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு ரசீதும் என இரட்டை ரசீது முறை உள்ளதால் பணியாளர்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இரட்டை ரசீது முறையை ஒழித்து ஒரே ரசீது வழங்க வேண்டும். பொருட்களை எடை போட்டு நியாய விலைக் கடைகளுக்கு கொடுக்காமல், ஆய்வு என்ற பெயரில் இருப்பு குறைவு இருப்பதாகக் கூறி காசு பறிக்கும் நோக்கத்திலும், பணியாளர்களைப் பழிவாங்கும் எண்ணத்துடனும் உயர் அலுவலர்கள் செயல்படுகின்றனர். இதுபோன்ற அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

அதே நாளில் நாகை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரின் பணியாளர் விரோத செயலைக் கண்டித்து அவரது அலுவலகம் முன் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம், அரசு பணியாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் தேசிங்குராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ், மாநில இணைச் செயலர்கள் ராமலிங்கம், பாஸ்கர், குணசீலன், ராஜா, மாவட்டத் தலைவர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.