தஞ்சாவூர் மேயராக திமுகவைச் சேர்ந்த சண்.ராமநாதன் தேர்வு


துணை மேயராக அஞ்சுகம் பூபதி தேர்வு


அதிமுக உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது


தஞ்சாவூர் மேயராக திமுகவைச் சேர்ந்த சண்.ராமநாதன் மாநகர மேயராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 40 வார்டுகளிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேட்சைகள் இரு இடங்களிலும், பாஜக, அமமுக தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.


இதையடுத்து மாநகராட்சின் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் காலை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் 45-வது வார்டு உறுப்பினர் சண்.ராமநாதன் தனது வேட்புமனுவை ஆணையர் க.சரவணக்குமாரிடம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் 41 -வது வார்டு உறுப்பினர் மணிகண்டனும் மேயருக்கு போட்டியிடுவதாக வேட்புமனுவை வழங்கினார்.


போட்டி இருந்ததால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சண்.ராமநாதன் 39 வாக்குகளும், அதிமுகவின் மணிகண்டன் 11 வாக்குகளும் பெற்றனர். அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரு மாமன்ற உறுப்பினர் மேயர் தேர்தல் கூட்டத்துக்கு வரவில்லை. இதையடுத்து 39 வாக்குகள் பெற்ற சண்.ராமநாதனை மேயராக ஆணையர் அறிவித்து, அதற்கான சான்றிதழை வழங்கினார். பின்னர் திமுக, காங்கிரஸ்,அதிமுக, சிபிஐ கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மேயரை வாழ்த்தி பேசினர்.




இதையடுத்து முற்பகல் 11.10 மணியளவில் கூட்டம் நிறைவைடைந்ததும், அனைத்து உறுப்பினர்கள் வெளியே சென்றுவிட்டனர். இதையடுத்து மீண்டும் பகல் 12.20 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாமன்ற கூட்ட அரங்குக்கு வந்தார். அப்போது மேயராக தேர்வு செய்யப்பட்ட சண்.ராமநாதனுக்கு 108 பவுனால் ஆன தங்க சங்கிலியை அணிவித்தார். தொடர்ந்து ஆணையர் வெள்ளி செங்கோலை மேயரிடம் வழங்கினார். அப்போது எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகே.ஜி.நீலமேகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பெரும்பாலான திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கூட்ட அரங்கில் அப்போது இல்லை.




மேயராக பொறுப்பேற்ற சண்.ராமநாதன் கூறுகையில் பாரம்பரியமிக்க தஞ்சாவூருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மாமன்ற உறுப்பினர்களின் துணையோடு செயல்படுத்தப்படும். பொது மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படும். தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆணையர், இன்னும் 5 ஆண்டுகளுக்கு இங்கேயே இருந்து என்னுடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம் எனக் கூறி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.




தஞ்சாவூர் மாநகர துணை மேயருக்கான தேர்தல்  பிற்பகல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும், அதிமுக சார்பில் காந்திமதியும் போட்டியிட்டனர். இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அஞ்சுகம் பூபதி 42 வாக்குகளும், காந்திமதி 8 வாக்குகளும்  பெற்றார். அமமுக மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கினியாள் துணை மேயர் தேர்தலுக்கும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற அஞ்சுகம் பூபதி துணை மேயராக வெற்றி வெற்றதற்கான சான்றதழை ஆணையர் சரவணக்குமார் வழங்கினார்.