நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட 38ஆவது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளது.
இதில் நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகள் என மொத்தம் 123 வார்டுகள் உள்ளன. இதில், மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாச்சி இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தரங்கம்பாடி பேரூராட்சியில் இரண்டு அதிமுக வேட்பாளரும், 1 திமுக வேட்பாளர் என 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால், நகராட்சியில் 59 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சியில் 60 உறுப்பினர்கள் என மொத்தம் 122 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்டத்தில் திமுக 77 அதிமுக 23, பாமக 06, தேமுதிக 01, சுயேச்சை 07, விசிக 01, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 01, சிபிஐ 01, காங்கிரஸ் 03, மதிமுக 02 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 24, காங்கிரஸ் ஒன்று, மதிமுக ஒன்று, அதிமுக 7 பாமக 2 ஆகிய இடங்களை கைப்பற்றின. இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது உறுதியானது. அதேசமயம் தலைவருக்கான பதவிக்கு திமுகவில் இருதரப்பினர் முனைப்பு காட்டியதால் கடும் போட்டி நிலவியது.
திமுக கட்சி சார்பில் மயிலாடுதுறை திமுக நகர செயலாளராக உள்ள குண்டாமணி என்கிற செல்வராஜ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 35 வாக்குகளில் 18 வாக்குகள் குண்டாமணி செல்வராஜுக்கு விழுந்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட லிங்கராஜனுக்கு அதிமுக உறுப்பினர்கள் அளித்த வாக்குகளையும் சேர்த்து 16 வாக்குகள் கிடைத்தன. ஒரு செல்லாத வாக்கு பதிவானது. இதையடுத்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிங்கராஜனைவிட 2 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் திமுக 11, அதிமுக 3, சுயட்சை 6, பாமக 2, தேமுதிக 1, மதிமுக 1 ஆகிய 24 பேர் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் மதிமுக உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் நகரமன்ற தலைவருக்கான பதவியை திமுக கூட்டணி கட்சியில் கேட்டிருந்த நிலையில், அவருக்கு வழங்காமல் திமுக உறுப்பினருக்கு வழங்கியதால் அதிருப்தி அடைந்து தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இவரை தவிர மற்ற இருபத்தி மூன்று பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லாததால் திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் போட்டியின்றி நகர்மன்ற தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சீர்காழி நகராட்சி ஆணையர் இப்ராஹிம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோல் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 3, சிபிஐ 1, பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திமுகவை சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் மூன்று வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 வார்டுகளிலும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 திமுக, விசிக 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி பெற்று கடந்த 2 ஆம் தேதி பதவியேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு 14 ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி மற்றும் 5 வது வார்டு அதிமுக உறுப்பினர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வார்டு உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை முன்மொழிந்தும், வழிமொழிய ஆள் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 14 வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக சுகுணசங்கரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மணல்மேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 8, காங்கிரஸ் 1, விசிக 1, அதிமுக 5 வெற்றி பெற்றனர். இந்நிலையில் மணல்மேடு பேரூராட்சியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் கண்மணி அறிவழகன் 10 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று பேரூராட்சி தலைவராக பதவியேற்றார்.
இதேபோன்று குத்தாலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 3, காங்கிரஸ் 1, பாமக 1 வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் குத்தாலம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் சங்கீதா மாரியப்பன் 12 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அனைத்திலும் திமுகவை சேர்ந்தவர்களே தலைவராக பொறுப்பேற்றுள்ளனர்.