தஞ்சையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க., கூட்டணியுடன் எங்கள் கட்சி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க., ஒன்றை தலைமையுடன் செயல்பட்டு வருவது தான் பழக்கம். சசிகலா தலைமையில் அ.தி.மு.க., செல்லும் என எனது அரசியல் பார்வையில் பல ஆண்டுக்கு முன்பு கூறினேன். அது நடக்கும் போல இருக்கிறது. எனவே, சசிகலாவுடன் அ.தி.மு.க., ஒன்று சேர்வதால் பலம், இதை மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பது எல்லாம் தெரியாது. மாற்று அணி, எதிர் கட்சிகளில் என்ன நடந்தாலும் எங்களுக்கு கவலை கிடையாது.


அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி, அவர்களுக்கான வாக்கு வங்கியுள்ளது.  அ.தி.மு.க.,விற்கு உள்ள வாக்கு வங்கியால், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம் கிடையாது. எந்த மாநகராட்சியிலும், நகராட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடையாது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மாநகராட்சி மேயராக, நகராட்சியில் தலைவராக வர வேண்டும் என்றால், பெரும்பாண்மையான கட்சியான தி.மு.க., ஆதரவுடன் தான் வர வேண்டும். அப்படி உள்ள சூழலில், கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மேயராக வரும் போது, தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கு ஏமாற்றம் என்பது வாடிக்கையான ஒன்று தான்.


ஆனால், அவர்களை சமதானம் செய்ய கூடிய இடத்தில் தி.மு.க., தலைமை தான் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாண்மை இருந்து இருந்தால், 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் ஆட்சி அமைத்து இருப்போம். பெரும்பாண்மை இல்லாததால் தான்  கூட்டணி வைத்துள்ளோம். இன்றைக்கு காங்கிரஸ் கட்சி உள்ள நிலைமையில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பது தான் சாதுர்யமானது. தமிழகத்தில் பெரிய, சிறிய கட்சிகள் கூட்டணி மூலமாக தான் தேர்தலை சந்திப்பது அரசியல் சாதுர்யமானது.




நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மருத்துவம் படிக்க 8 ஆயிரம் பேருக்கு தான் சீட் வழங்க முடியும். அப்படியிருக்கும் சூழலில் மீதமுள்ளவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளுக்கு தான் செல்ல வேண்டும். உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் இருந்து பல பேர் மருத்துவம் படிக்க சென்றுள்ளனர். உக்ரைனில் படிக்கும் 18 ஆயிரம் பேரில் அனைவரும் மருத்துவ மாணவர்கள் கிடையாது. இன்ஜினீயரிங் மாணவர்களும் உள்ளனர்.


ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த விட்டால், அவர்களின் படிப்புக்கு பெரிய இடைவெளி ஏற்படும். உடனே மீண்டும் உக்ரைனிற்கு திரும்பி போக முடியாது. அதனால் இந்தியாவில் அவர்கள் படிப்பை தொடர முடியமா என்றால், அதுவும் சிரமம். எனவே, வேறு ஒரு நாட்டுடன் மத்திய அரசு பேசி, ஒப்பந்தம் போட்டு, உக்ரைனில் படித்த மாணவர்களுக்கு மீண்டும் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை மத்திய அரசு இப்பவே முயற்சி எடுக்க வேண்டும்.


இந்த மத்திய அரசு, மக்களுக்கோ, மாநில அரசுக்கோ யாருக்கும் செவி சாய்ப்பது கிடையாது. அவர்களிடம் இருக்கு முரட்டு பெரும்பாண்மையால் எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ளுகிறார்கள். பா.ஜ.,விற்கு இந்த தேர்தலில் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது என கூறுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானால் கோவை மற்றும் காரைக்குடியில் வெற்றி பெறவில்லை. இது குறித்து புள்ளி விபரங்களுடன் பேச தயார் என்றார்.