தஞ்சாவூர்: எப்போ பெய்யும்... எப்போ நிற்கும் என்று தெரியாமல் தஞ்சை மக்களை அல்லாட வைத்து வருகிறது மழை. கடந்த 2 நாட்களாக வருவேன்... வர மாட்டேன் என்று கருமேகங்கள் திரண்டு நின்று மழை வரும் என்று எதிர்பார்த்தால் வராது. கருமேகங்களே இல்லாத போது ஒரு மணி நேரத்திற்கு மழையானது வெளுத்தெடுக்கும். இப்படி மழை மக்களை சுற்றலில் விட்டு அல்லாட வைத்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.
தொடர்ந்து 3 மணி நேரம் மழை வெளுத்தெடுத்தது. இதனால் தஞ்சையின் நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் வல்லம், திருவையாறு, பூதலூர், பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிங்க: Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
காலையில் பெய்த மழையால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத அளவிற்கு திடீர், திடீரென்று பெய்து மக்களை மழை மிரட்டியது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95.30 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதன்படி திருவிடைமருதூரில் 18.90 மி.மீ, கும்பகோணத்தில் 11மி.மீ, தஞ்சாவூரில் 6.50மி.மீ, பாபநாசத்தில் 11.80 மி.மீ, திருவையாறு 0.60 மி.மீ, பூதலூரில் 3.80 மி.மீ, ஒரத்தநாடு 10.20 மி.மீ, பட்டுக்கோட்டை 17.50 மி.மீ, போராவூரணியில் 15 மி.மீ. என மொத்தமாக 95.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.53 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் திருவிடைமருதூரில்தான் மழைப் பொழிவு அதிகம். இத்தகவலை தஞ்சை பேரிடர் மோலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல் இன்றும் அதிகாலை 4 மணியிலிருந்து பூதலூர், வல்லம், ஆலக்குடி, 8.கரம்பை உட்பட பல பகுதிகளில் மழை சாறலாக பெய்து கொண்டே இருந்தது. தஞ்சை மாநகரில் காலை 10 மணியளில் சாரலாக பெய்ய ஆரம்பித்து விட்டு விட்டு பெய்த மழையால் வாகன ஓட்டுனர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மதியத்தில் ஒரு மணிநேரம் திடீரென்று பெய்த கனமழையை எதிர்பார்க்காத மக்கள் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடி ஓட்டமாய் ஓடி வேண்டிய நிலை உருவானது. இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பூதலூர் விவசாயி சுதாகர் கூறியதாவது:
இந்த மழை தற்போதைய சம்பா சாகுபடி பயிர்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். தற்போது பயிர்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் இந்த மழை பெரிய அளவில் உதவுகிறது. இதேபோன்று பெய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது என்று வருத்தப்பட்ட நிலையில் இந்த மழை எங்களுக்கு கை கொடுத்துள்ளது. பூச்சி தாக்குதல்கள் ஓரிரு இடங்களில் காணப்பட்டாலும் இந்த மழை விவசாயிகளுக்கு மிகுந்த உதவியாகத்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.