தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சம்பா, தாளடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையிலும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணி மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலே தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முகூர்த்த தினம் என்பதால் உறவினர்களின் திருமணத்திற்கு புறப்பட்ட மக்கள் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆலக்குடி, வல்லம், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், ராயந்தூர் உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல பகுதிகளில் விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். சில விவசாயிகள் பாய் நாற்றங்கால், நாற்று பறித்து நடுதல் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் 40 நாட்கள் கடந்த நாற்றுகள் நன்கு வளர்ந்து வருவதால் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை இந்த பயிர்களுக்கு நன்கு உதவும் என்று விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தற்போதுதான் நாற்றுகள் நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்தால் வயலில் தண்ணீர் தேங்கி அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தஞ்சை நகர் பகுதி, கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், புதிய பேருந்து நிலையம், நாஞ்சிக்கோட்டைசாலை, வல்லம், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதியம் 1 மணி முதல் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. பின்னர் சற்று மழை நின்றது. பின்னர் மாலையில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விடுமுறை தினத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஆலக்குடி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே நாற்று நட்ட விவசாயிகள் தற்போது வயல்களில் களை பறித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் சம்பா, தாளடி பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுவை சாகுபடி எவ்வாறு இலக்கை மிஞ்சி நடந்ததோ அதேபோல் தற்போது 3.40 லட்சம் ஏக்கரை விட சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் தற்போது 2.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.