தஞ்சாவூர்: எப்படி இருக்கீங்க... முகம் நிறைய புன்னகையுடன் தஞ்சாவூர் புட் ஸ்ட்ரீட்டில் உணவகங்கள் வைத்துள்ளவர்களை நலம் விசாரித்தப்படியே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நம்ம தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன். எளிமைக்கு மறுபெயர் என்று பெயர் பெற்றுள்ளார் இவர்.

Continues below advertisement


காலை வேளையில் கூட மக்கள் நடமாட முடியாத நிலையில் இருந்த பகுதி இன்று தினமும் திருவிழா போன்று எவ்வித அச்சமும் இன்றி மக்கள் உற்சாகத்துடன் வந்து செல்லும் பகுதியாக மாறியுள்ளது. இதற்கு முழு முயற்சிகள் எடுத்து மண் சாலையாக இருந்ததை தார்சாலையாக மாற்றி நூற்றுக்கணக்கானவர்களின் பொருளாதாரத்தை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை உயர வளமாக்க உதவியுள்ளார் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். இதை தஞ்சை நகர் மக்கள் மட்டுமல்ல, புட் ஸ்ட்ரீட்டில் உணவகம் வைத்துள்ளவர்களும், அங்கு பணியாற்றுபவர்களும் தினம் தினம் நினைத்து பார்க்கின்றனர். பிறரிடம் தெரிவிக்கின்றனர். 



அந்த இடம் புட் ஸ்ட்ரீட் அமைந்துள்ள இடம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகில்தான். வெறும் மண்சாலையாக பகல்நேரத்தில் கூட மக்கள் நடந்து செல்ல அச்சப்பட்ட பகுதி இன்று இரவு நேரத்திலும் குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக வந்து தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு செல்லும் பகுதியாக மாறி உள்ளது. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி எதிர்புற சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேர தள்ளுவண்டிகள் உணவகங்கள் ஒவ்வொன்றாக வைக்கப்பட்டன. நல்ல உணவுக்கும், தரத்திற்கும் கை கொடுத்து முன்னேற்றம் காண வைக்கும் தஞ்சை மக்களின் விருப்பமான இடமாக இந்த பகுதி மாறியது.


ஆரம்பத்தில் கௌசா உணவுகள், பிரியாணி, சிக்கன் சமோசா, சூப், சிக்கன் உணவுகள் என்று தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆர்வம் பல்வேறு வாலிபர்களையும் சொந்த தொழில் தொடங்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால் விதவிதமான பானிபூரி கடைகள், சேலம் தட்டுவடை, சிக்கன் உணவுகளின் பலவிதமானவை, டிபன் சென்டர், குல்பி ஐஸ் வகைகள் என்று ஒன்றல்ல... இரண்டல்ல சுமார் 30க்கும் அதிகமான கடைகள் அப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் கூட்டமும் அதிகரித்தது. மக்கள் தாங்கள் வரும் வாகனங்களை அப்பகுதியில் வரிசையாக நிறுத்த இடமில்லை.




இதனால் சாலையில் நிறுத்தியதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மிகவும் முக்கியமான சாலையாகவும், எப்பொழுதும் வாகன போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதால் இந்த போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடியாக அப்பகுதியில் உணவு கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். உணவுக்கடை வைத்தாவது குடும்பத்தினரை காப்பாற்றி விடலாம் என்று கடைகள் அமைத்த வாலிபர்கள் இந்த நடவடிக்கையால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். வருமானம் இழப்பு ஏற்பட்டு கடன் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு பாதிப்பு. என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர்.


இவர்களின் கவலையை போக்கும்விதமாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடுத்த ஆலோசனையின் படி அமைக்கப்பட்டதுதான் இந்த  உணவகத் தெரு. இப்போது அந்த இடத்தின் அடையாளமே மாறி போய்விட்டது. 80க்கும் அதிகமான கடைகள் இப்போது உணவகத் தெருவை அலங்கரிக்க தொடங்கி விட்டன. மக்கள் இப்போது தங்களின் பேராதரவை தந்து வருகின்றனர். தாராளமாக வாகனங்கள் நிறுத்த இடம், அமைதியான சூழலில் உணவுகள் சாப்பிடலாம் என்பதால் தஞ்சை மக்கள் குடும்பம், குடும்பமாக இங்கு வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு அதிகளவில் மக்கள் உணவுகளை ரசித்து ருசித்து, சாப்பிடுகின்றனர். 




நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த உணவுத் தெருவை நம்பி தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மேலும் உணவுத் தெருவில் கடைகள் அமைத்துள்ளவர்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார் மேயர் சண்.ராமநாதன். இப்படி தஞ்சையின் வண்ணமயமான புட் ஸ்ட்ரீட்டில் மிகவும் எளிமையாக வந்து உணவகங்கள் வைத்துள்ளவர்களுடன் கலந்து பேசி, குறைகளை கேட்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து செலிபிரிட்டியாக மாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் மேயர் சண்.ராமநாதன். புட் ஸ்ட்ரீட் உங்கள் வாழ்க்கையை மாற்றி உள்ளது. உணவுகளை தரமாக கொடுத்து மக்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளும் தெரிவித்து அவர்களுடன் வெகுநேரம் பேசி சென்றுள்ளார் மேயர் சண்.ராமநாதன். இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் மீளவே இல்லை என்பதுதான் உண்மை.


இதுகுறித்து புட்ஸ்ட்ரீட்டில் கடை வைத்துள்ளவர்கள் கூறுகையில், திடீரென்று வந்து ஷாக் கொடுத்துட்டார் மேயர். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்துச்சு. அதுமட்டுமா சால்வை அணிவித்து எங்களை செலிபிரிட்டியாகவே மாற்றிட்டார். உண்மையிலேயே இங்க இருக்கிறவங்களோட வாழ்க்கை பொருளாதாரம் இந்த கடைகளை நம்பிதான் இருக்கு. எங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார் மேயர் என்று கூறினாலும் தப்பே இல்லை. அவர் திடீர் விசிட் அடித்து எங்களுக்கு சால்வை அணிவித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றனர்.