டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேவை கண்டித்தும், கரோனா காலத்துக்கு முன்னால் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், திருவாரூர் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும், மன்னார்குடியில் இருந்து கோவை செல்கின்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் வரை நீட்டித்து, அங்கு இன்ஜின் மாற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நன்னிலம் ரயில் நிலையத்தில் மறித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்    தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி என்ற இடத்தில், மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் முன்பாக நடந்தே வந்தனர், எக்ஸ்பிரஸ் விரைவுரையிலும் மறியல் செய்தவர்கள் பின்னால் மெதுவாக இயக்கப்பட்டது.


கொரடாச்சேரி அருகே கிளரியம் வந்தடைந்தபோது , அங்கு ஏற்கனவே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, நாகை தொகுதி எம்பி எம் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் எம் பி துரைவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உட்பட அரசியல் கட்சியினரும்  இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.


இது குறித்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறுகையில், "மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் தினம்தோறும் நீடாமங்கலத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்கள் வெளியூருக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர் ரயில் நிலையம் வந்து என்ஜின்களை மாற்றிக்கொண்டு மீண்டும் நீடாமங்கலம் வழியாக சென்றால் திருவாரூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் பயனடைவர். மேலும் போக்குவரத்து பாதிப்பும் இருக்காது. ஆகையால் ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மேலும் பழமை வாய்ந்த கொரடாச்சேரி பேரளம் முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில் விரைவு ரயில் நிறுத்திச் செல்ல வேண்டும் இந்த இரண்டு கோரிக்கைகளை உடனடியாக ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம் ஆனால் எந்த ஒரு கோரிக்கைக்கும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை ஆகையால் தற்பொழுது தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என தெரிவித்தார்.




 


இதனிடையே, மன்னார்குடியில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் மன்னார்குடி தேரடியில் இருந்து பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் விரைவுரையில் எந்த ஒரு வழித்தட மாற்றமும் என்று இயக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.