தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பேராவூரணி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தெரிந்து கொள்ள சுற்றுலாவாக மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விவசாயி ராஜா கிருஷ்ணன் என்பவர் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.



இவர் தான் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார். நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது. இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது. இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.





பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.

இவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீரக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்தையும் அதிகப்படுத்தி உள்ளதாக சுற்றுலாவாக வந்த விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் பராம்பரிய நெல் சாகுபடியில் தனது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார். பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.





நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் தரிசாகி விட்டன.

சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை போன்றவை ஏராளமான வகைகள் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள். இப்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு திரும்பி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.