கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள், பொது போக்குவரத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டிந்தது. அரசு  பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் அந்தந்த ஊர் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை சற்று குறையத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் அவசர கதியில் மீண்டும் இயக்க பயன்பாட்டுக்கு வந்தது.




இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து இருந்து இன்று காலை காரைக்காலை நோக்கி புதுச்சேரி மாநில அரசு பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநர் செந்தில் ஓட்டிசெல்ல நடந்துனர் பரசுராமன் என்பவர் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து பேருந்து பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் காரைக்கால் நோக்கி பேருது புறப்பட்ட போது ராஜீவ்புறம் என்ற இடத்தில் பேருந்தின் எஞ்சினில் மின் இணைப்பில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. 




இதனைக் கண்ட ஓட்டுநர் பாதுகாப்பாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். தொடர்ந்து அவசர அவசரமாக பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனால் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர். மேலும் பேருந்து நடத்துனர் பொறையார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். 




மேலும் பேருந்து எரிந்த இடத்திற்கு உடனடியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அமைச்சர் சந்திரபிரியங்கா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் காரைக்கால் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பொறையார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓடும் பேருந்து நடுரோட்டில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில் வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசும் புதுச்சேரி அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பொது போக்குவரத்தை தடை செய்திருந்தது இதன் காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் பணிமனைகளில் பராமரிப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது மீண்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பணிமனைகளில் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் சரிவர பழுது பார்க்காமல் மீண்டும் சாலைகளில் இயக்கப்பட்டது இந்த தீ விபத்திற்கு காரணம் என்றும் பொதுமக்கள் உயிர் மீது அலட்சியம் காட்டாமல் அரசு பேருந்துகளை சரியான முறையில் ஆய்வு செய்து  இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.