மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை கொண்டு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட 4 தாலுகாக்களில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. குறுவை சாகுபடியில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக கொள்முதல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.




குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, திருவாவடுதுறை, மாம்புள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுடி செய்யப்பட்ட நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளை விற்பதற்காக ஆண்டுதோறும் திருவாலங்காட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில்  விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திருவாலங்காட்டில் திறக்கப்படவில்லை. இருப்பினும் திருவலாங்காட்டில் மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதை நம்பி 20 நாட்களுக்கும் மேலாக தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். 




அவ்வப்போது மழை பெய்வதால் வாடகைக்கு தார்பாய்கள் வாங்கி நெல் மூட்டைகளை மீது மூடி பாதுகாத்து வரும் நிலையில், 20 நாட்களுக்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிவந்து மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையின் நடுவே கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சுமார்  இரண்டு மணி போக்குவரத்து நேரம் பாதிக்கப்பட்டது.




தகவலறிந்த குத்தாலம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மேலும்  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கும் ஆனால் இந்த முறை பல இடங்களில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மூன்று இடங்களில் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது.


இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படும் முடியாமல் மழை நனைந்து வீணாகுவதாகுவும். தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு அறுவை செய்த நெல்லை விற்பனை செய்து பெரும் நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.