ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கடற்கரையோர மாவட்டங்கள் புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டமும் கடலோர மாவட்டம் என்பதால் அதிகளவு புயல், வெள்ள பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்னை அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை புரிந்து மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.




அவ்வாறு வரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினரும் மீட்பு பணிகளில் பணியாற்றுவர். இந்த சூழலில் உள்ளூர் காவல் துறையினருக்கு மழை, வெள்ளம், புயல் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து போதிய பயிற்சி அளிக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை  தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள்  காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 




அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெண் காவலர்கள் உட்பட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் கடந்த 2 ஆம் தேதி துவங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் சென்னையில் இருந்து வந்துள்ள கமாண்டோ படை காவல்துறையினர் 4 பேர் பங்கேற்று பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.


அதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான  இன்று மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகு மூலம் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை கயிறு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் காவல்துறை சேர்ந்தவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதும் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் கமாண்டோ படை வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினர்.




இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மிக்க, பேரிடர் மீட்புப் படையினர் வரும் வரை எதிர்பார்க்காமல் உள்ளூர் காவல் துறையினரே இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் இந்த பயிற்சி அமைந்துள்ளது என்றும், மேலும் இந்தப் பயிற்சி என விரிவுபடுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் பொதுவாக அளிக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு மற்றுமின்றி ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தன்னார்வலர்களும் இப் பயிற்சியினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.