தஞ்சாவூர்: தஞ்சை மாரியம்மன்கோவில் அருகே பூத்துக் குலுங்கும் ‘கூந்தல் பனை’ மரத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். இதனை தாலிப்பனை, குடைப்பனை, தேர் பனை என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கின்றனர். ஆயுளில் ஒருமுறை மட்டுமே இந்த விசித்திரமான அதிசயம் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

தஞ்சை அருகே பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு அருகில் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் வகையில் மிகவும் அரிதான ‘கூந்தல் பனை’ மரம் ஒன்று வான்முட்டப் பூத்துக் குலுங்குகிறது. தாவரவியல் ரீதியாகப் பல்வேறு விசித்திரங்களைக் கொண்ட இம்மரத்தை, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

பொதுவாகப் பனை குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் பல ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆனால், இந்த ‘கூந்தல் பனை’ (Fishtail Palm) மரத்திற்கு என்று ஒரு தனித்துவமான குணம் உண்டு. இதன் இலைகளின் ஓரங்கள் மீனின் வால் வடிவிலும், இதன் பூங்குலைகள் பெண்களின் அடர்ந்த கூந்தல் அவிழ்ந்து தொங்குவது போலவும் காட்சியளிக்கும். இதனாலேயே இதற்கு ‘கூந்தல் பனை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இம்மரத்தின் மிக முக்கிய விசித்திரம் என்னவென்றால், இது தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் தன்மையுடையது. மரத்தின் உச்சிப் பகுதியில் தொடங்கி, படிப்படியாகக் கீழ்நோக்கி ஒவ்வொரு கணுவாகப் பூங்குலைகள் வெளிவரும். கணு வரை பூத்து முடித்தவுடன், இம்மரம் தன் ஆயுளை முடித்துக் கொண்டு பட்டுப்போய்விடும். அதாவது இறந்துவிடும்.

தற்போது தஞ்சை மாரியம்மன் கோவில் பிரதான சாலையோரம் உள்ள இந்த மரத்தின் உச்சிப் பகுதியில், மஞ்சள் மற்றும் வெண்மை கலந்த நிறத்தில் பிரம்மாண்டமான பூங்குலை மலர்ந்து காட்சியளிக்கிறது. இது இம்மரத்தின் இறுதிப் பருவத்தின் தொடக்கத்தைக் காட்டுகிறது.

மாரியம்மன் கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், சாலையோரம் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பூத்து நிற்கும் இந்த மரத்தின் அழகும், அதன் பின்னணியில் உள்ள தாவரவியல் ரகசியமும் பலரையும் ஈர்த்துள்ளது.

"சாலையைக் கடந்து செல்லும் போது விசித்திரமான பூவோடு இந்த மரம் நிற்பதைப் பார்த்தோம். இதன் ஆயுட்காலத்தில் ஒரே ஒருமுறைதான் இப்படிப் பூக்கும் என்றும், அதன் பிறகு மரம் அழிந்துவிடும் என்றும் அறிந்தபோது இயற்கையின் படைப்பு வியப்பாக இருந்தது" என பக்தர்கள் தெரிவித்தனர்.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும், இந்த கூந்தல் பனையின் அரிதான இறுதிப் பருவ மலர்ச்சி தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.