தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29 .11.2021 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் மனு அளிக்கப்பட்டது.
அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப் படும் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதி மொழி படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் ,காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இயக்குனர்களுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் இயக்கம் சார்பில் நடைபெற்றது.
தஞ்சாவூரிலுள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜி. சுரேஷ்குமார், சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு. மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து சங்க துணை தலைவர் துரைமதிவாணன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை சங்க நிர்வாகிகள் எஸ். கணேஷ் குமார், டி.காயத்திரி , எம்.வினோத்,எஸ். துர்கா, டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், சுகாதார பணியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று போன்ற கொடூரமாக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தங்களது உயிரை கூட கவலைப்படாமலும், குடும்பத்தாரை பற்றியும் எந்த அக்கறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எந்த விதமான நோய்கள் உருவானாலும் சுகாதார பணியாளர்களின் பங்கு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைப்பளுகாரணமாக சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலில் ஆளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் பிப்ரவரி மாதம் 3 ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.