தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்கா, ஆடுதுறை பிஸ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயசங்கர் மற்றும் கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால், தனலெட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் மணிவேல் ஆகிய இருவரது வீடுகளிலுள்ள கதவுகளை உடைத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம்  தேதி சுமார் 16 பவுன் நகைகளை திருட்டு போனது. இதே போல் நவம்பர் மாதம் 5 ந்தேதி திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை உடைக்க முயற்சி நடந்தது. இது குறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிந்து, எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி உத்தரவின் பேரில் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில், தனிப்படை எஸ்ஐ காமராஜ், போலீசார்கள் கலியரசன், விக்னேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் தேடி வந்தனர்.




 இந்நிலையில், திருவிடைமருதுார் கடைத்தெருவிலுள்ள நகைகடை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் நின்று கொண்டிப்பதாக, திருவிடைமருதுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார், சென்று அவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில், காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்ததில், தஞ்சை மாவட்டம், திருவையாறு, புதுஅக்ரஹாரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வகார்த்தி (35) என்பதும், திருவிடைமருதுாரில் இரண்டு வீடுகளில் திருட்டியதையும், திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து செல்வகார்த்தியை மேலும் இந்த கொள்ளையில் தொடர்பில் உள்ளார்களா என்றும், தமிழகம் முழுவதும் வேறு பகுதியில் கொள்ளையடித்துள்ளார்கள், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.




இது குறித்து போலீசார் கூறுகையில், திருவிடைமருதுார் தாலுக்காவில் நடந்த சம்பவத்தை வைத்து, தனிப்படை அமைத்து தேடி வந்தோம். திருடிய நகைகளை விற்பனை செய்ய வந்த போது, போலீசாரிடம் சிக்கி கொண்டார். செல்வகார்த்தி, கடந்த 2015 ஆம் ஆண்டு கூத்தாநல்லுாரில் நடந்த 150 பவுன் நகைகள் கொள்ளையிலும், அதிராம்பட்டிணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கியில் நடந்த 350 பவுன் நகை கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்பனை செய்ததுள்ளார்.


இவர் மீது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் திருட்டு, வழிபறி, கொள்ளை போன்ற சம்பங்களில் ஈடுபட்டள்ளார். செல்வகார்த்தியை திருவிடைமருதுார் தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளதையடுத்து, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார், செல்வகார்த்தி விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தை கலக்கிய பலே கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியதால், அவர்களது கூட்டாளிகள் சிலர் தலைமறைவாகி உள்ளனர்.  விரைவில் அவர்களை பிடித்து, கொள்ளையடித்த பொருட்களை மீட்க்கப்படும் என்றார்.