தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணி மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு, தனியார் வியாபாரிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். இதனை ஒழுங்குப்படுத்துவதற்காக, திருவாரூர் காவிரி படுகை வேளாண் விளை பொருட்கள் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் நித்திராஜ் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


அதில் நெல் மூட்டைகள் விற்பனை செய்வதில், குடிமை பொருள் அதிகாரிகள் மற்றும்  வருவாய்த்துறை  அதிகாரிகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருக்கின்றது என தெரிவித்திருந்தார்.  இது தொடர்பாக முதன்மை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர்,  உணவு மற்றும் நுகர்பொருள் துறை, திருவாரூர் காவிரி படுகை வேளாண் விளை பொருட்கள் வியாபாரிகள் சங்கத்தினர் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். அதில்  டெல்டா பகுதிகள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதை சரிசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டது


அந்த கூட்டத்தின் முடிவில் டிரான்ஸ்ஸிட் விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமையியல் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் ப்ரியா கூறுகையில்,  “ஒழுங்குமுறை விற்பனை கூடம், நுகர்பொருள் வாணிப கழகம், லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி டிரைவர்கள் என அனைவருக்கும் இந்த விண்ணப்பத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். தற்போது நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் லாரிகளை சோதனை செய்யும் போது, சரியான தகவல் கொடுப்பதில்லை.


விவசாயிகள் நேரடியாக நெல் மூட்டைகளை வியாபாரிகளிடம் கொடுப்பார்கள்.  வியாபாரிகள் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், அவர்களிடம் சரியான தகவல் இருக்காது.  இதனால் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு டிஜிபி ஆபாஷ்குமார்  ஆணையின்படி, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளரிடம் பேசி, டிரான்ஸிட் விண்ணப்பத்தை அறிமுகம் செய்துள்ளோம்.




லாரிகளை ஆய்வு செய்யும்போது, நெல் மூட்டைகள் யாரிடம் வாங்கப்பட்டவை என்பன உள்ளிட்ட அனைத்த விவரங்களும் இருக்க வேண்டும். அதற்காக இந்த டிரான்ஸிட் விண்ணப்ப முறையை கொண்டு வந்துள்ளோம். அதில் விற்பனை செய்பவரின் பெயர், அரிசி ஆலை உரிமையாளரின் தந்தை பெயர், டின் நம்பர், இன்வாய்ஸ் நம்பர், முகவரி, செல்ஃபோன் நம்பர், வாங்குபவரின் நிறுவனம், வியாபாரிகளின் பெயர், ஆணை விண்ணப்பம், முகவரி, செல்ஃபோன் நம்பர், நெல்லின் ரகம், மூட்டைகளின் விவரம், மூட்டைகளின் எண்ணிக்கை, நெல் மூட்டைகளை வாங்கப்பட்ட விவரங்கள், லாரியின் பதிவு எண், லாரியின் இன்ஜின் எண் மற்றும் சேஸ் நம்பர், லாரியின் உரிமையாளர் பெயர், செல்போன் நம்பர், ஓட்டுநர் உரிமம், லாரி புறப்படும் இடம், மூட்டைகளை ஏற்றிய தேதி, செல்லும் துாரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும். 


 




மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து சேமிப்பு கிடங்கிற்கு செல்லும் லாரிகளில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும். ஆனால் தனியார் விவசாயிகள், தனது சொந்த  நெல் மூட்டைகளை எடுத்து சென்று, எந்த மில்லில் கொடுத்தார்கள் என எந்தவிதமான விவரங்களும் இருக்காது.


சில சமயங்களில், ஆய்வு செய்யும்போது ரசீதே இருக்காது.  முழுவதும் தவறான தகவல்களாக இருக்கும். தனியார் வியாபாரிகள், நெல் மூட்டைகளை கொண்டு செல்பவர்களுக்காகத்தான் டிரான்ஸிட் விண்ணப்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், எந்த விதமான பிரச்னையும் இல்லை.  இந்த விண்ணப்பத்தில் உள்ள படிவங்களில் தகவல்கள் சரியாக இல்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும்.  இனி வரும் காலங்களில் இந்த விண்ணப்பத்துடன்தான் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.