தஞ்சாவூர் மணிமண்டபத்தைப் புனரமைக்கத் திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது என்று அரசு முதன்மைச் செயலர் மணிவாசன் தெரிவித்தார்.

 

தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மன்னருக்காக தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் புனரமைக்கப்பட்டு, பொலிவூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதன்படி, இந்த மண்டபத்தைச் சீரமைக்க வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்தாலோசித்து, இதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணியைப் பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

இதில் அத்தியாவசிய பணிகள், மண்டபத்தை மேம்படுத்துவது, குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் போன்றவை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்யப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள பல்வேறு பாரம்பரிய கட்டடங்களையும் பழமையான முறையில் சிறப்பாகக் கொண்டு வரும் பணியையும் பொதுப் பணித் துறை  செய்து வருகிறது.

தஞ்சாவூர் அரண்மனைக்கு கடந்த ஆண்டு பொதுப் பணித் துறை மூலம் ரூ. 2 கோடிக்கும் அதிமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு மூன்று பணிகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட ரூ. 8 கோடி அளவில் செய்ய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்)  சுகபுத்ரா மற்றும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது

இதில் அவர் பேசியதாவது: சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,

மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூபாய் 1. 70, 000 மதிப்பில் தொகுப்பு நிதி, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும் வருவாய் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டத்தை சார்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதில் தஞ்சாவூர் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர். எஸ். பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக நல அமைப்பாளர் இளங்கோவன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.