திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டு அந்த வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக ரூ.294 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சென்னை வருகை தந்த பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

 

அதை ஒட்டி திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், நாகை எம்பி எம். செல்வராஜ், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ  மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



 

சென்னையில் பிரதமர் மோடி கொடியசைத்து திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும், பொதுமக்களும் கைத்தட்டி உற்சாகமாக ரயிலை வழி அனுப்பி வைத்தனர். இந்த ரயிலானது, 4 பெட்டிகள் மற்றும் இரண்டு ரயில் இன்ஜின்களுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள டெமு ரயிலாகும். இந்த ரயிலானது, தினசரி காலை 6:45 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 7.40க்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7.55  மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 8.50 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 3:30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 04.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளிக்கு சென்றடைகிறது, மீண்டும் 4:40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த டெமு ரயில் புறப்பட்டு திருத்துறைப்பூண்டிக்கு 05.35 மணிக்கு வந்தடைகிறது.

 

திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் குறவபுலம், நெய்விளக்கு,தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்த்தியம் பள்ளியில் ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அகஸ்தியம்பள்ளியில் விரைவாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும், அகஸ்தியம்பள்ளியிலிருந்து தொலைதூரங்களுக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.