மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரின் 26 வயதான மகள் அர்ச்சனா. இவருக்கும் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான முருகப்பன் என்பவருக்கும் கடந்த 2014 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 7 வயதில் ஹர்ஷித் என்கிற மகனும், இரண்டரை வயதில் ஷிவியாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு வரதட்சணை வேண்டாம் என சொல்லி முருகப்பனின் குடும்பத்தினர் அர்ச்சனாவை திருமணம் செய்துள்ளனர்.
ஆனால் திருமணம் முடிந்த பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிது சிறிதாக 18 பவுன் வரை வரதட்சணையாக பெற்றுள்ளனர். பின்னர் இளைய மகள் பிறந்தவுடன் மீண்டும் வரதட்சனை கேட்டுள்ளனர். ஆனால் செல்வகுமார் குடும்பத்தினரால் மேலும் வரதட்சணை வழங்க முடியாததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்றும், அர்ச்சனாவையும் பிறந்து வீட்டுக்கு அனுப்பாமலும் இருந்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் தொடர்பு இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நேற்று முருகப்பனின் உறவினர்கள் அர்ச்சனா குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு, அர்ச்சனா விஷம் குடித்து இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Google New Restriction: லோன் ஆப்களுக்கு கூகுள் வைத்த செக்…! மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு..!
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சனாவின் பெற்றோர், பதறி அடித்து கொண்டு மருத்துவமனையில் வந்து பார்த்தபோது அர்ச்சனா கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அர்ச்சனாவை முருகப்பன் மற்றும் அவரது பெற்றோர் அடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதாக குற்றம் சாட்டியும், உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அர்ச்சனாவின் இரண்டு குழந்தைகளையும் கொண்டு வந்து ஒப்படைக்கவும் வலியுறுத்தி அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் முன்பு அமர்ந்து கொண்டு அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், உரிய தீர்வு காணப்படாமல் அர்ச்சனாவின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அர்ச்சனாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது உயிர் இருந்ததாகவும், சிகிச்சையின் போதே ரத்தம் வெளியேறியதாகவும் முருகப்பன் தரப்பினர் தெரிவித்தனர். பெண் உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதது மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்