திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சந்திரா (71). சந்திரா கடந்த 6ஆம் தேதி சேரன்குளம் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்துக்காக காத்து இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சந்திராவிடம் உங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறேன் என கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றவுடன் தண்ணீர் கேட்பது போல நடித்து சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.



 

இது குறித்து பாதிக்கப்பட்ட சந்திரா கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனையடுத்து கோட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் கோட்டூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்காக 70க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர். ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் இந்த நிலையில் பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (42) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அவர் வீட்டை சுற்றி காவல் துறையினர் வளைத்தனர். அப்போது அவர் வீட்டில் தப்பி ஓட முயன்றார் அவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சந்திராவிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தன் மீது முத்துப்பேட்டை பெருகவாழ்ந்தான் கலப்பால் நீடாமங்கலம் திருச்சி திருவெறும்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

இந்தநிலையில் குற்ற சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தில் குற்றவாளியை பிடித்து அவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்மணியின் தங்க நகைகளை கைப்பற்றிய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் அதுமட்டுமன்றி சந்தேகத்திற்கு இடமான நபர்கள் சுற்றி தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.