திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பாலாக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள அன்பழகன் என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடி கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.



 

அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினரும் சிறுமியின் உறவினர்களும் அன்பழகனை பிடித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் அடிப்படையில் இந்த  வழக்கை திருவாரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர். அதன் அடிப்படையில் அன்பழகன் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது போஸ்கோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அன்பழகனை அடைத்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 



 

அதே நேரத்தில் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வளர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து புரிய வைக்க வேண்டும், குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் இதே போன்று செய்தால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை குறைப்பதற்கான வழி வகைகள் அதிகமாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல் துறை சார்பில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாம் வகுப்பு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதனையடுத்து காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தின் மூலமாக அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.