தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூரில் பொங்கல் கரும்பு உட்பட பொருள்கள் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.


தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் தான் தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.


பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதும் வழக்கம். தஞ்சையிலும் பொங்கல் பொருட்களை  வியாபாரிகள் விற்கத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.



வந்திடுச்சு பொங்கல்... கரும்பு, மஞ்சள் பொருள்கள் விற்பனை அமோகம்


தஞ்சை சிவகங்கை பூங்கா, கீழவாசல் நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து சவுக்கு கட்டு போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு ஒரு கட்டு ரூ. 350 முதல் 400 வரையிலும், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஜோடி ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கட்டு சவுக்கு ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


அதில் முக்கியமாக தஞ்சை நகரத்தில் கீழவாசல் பகுதியில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள்  விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்களின் வரத்து அதிகமாக உள்ளது. பானைகள், கரும்புகளின் விலை சற்று உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்குகின்றனர்.


கோலமாவு, மஞ்சள் கொத்து ஆகிய பொருட்களையும் அதிக அளவில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்க தொடங்கி தொடங்கி உள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்னும் அதிகம் விற்பனை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தைக்கு திருவையாறு, கீழதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, வளம்பக்குடி, மேல உத்தமநல்லூர், ஈச்சங்குடி, பொன்னாவரை, நாயக்கர் பட்டி, வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வாழை இலை, வாழைத்தார்களை மினி வேனில் ஏற்றி வந்து உழவர் சந்தையில் விற்பனைக்காக குவிந்து வைத்துள்ளனர்.


தற்போது விவசாயிகள் கொண்டு வந்துள்ள வாழைத்தார்கள் நன்றாக முற்றிய நிலையில் உள்ளதால் இன்னும் ஒருசில தினங்களில் பழுத்துவிடும். வாழைத்தார் அதிக அளவில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் விலை குறைவாக விற்கப்படலாம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.