தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, போகி, பொங்கல், காணும் பொங்கல், உழவர் திருநாள் என கொண்டாட பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகைக்கும் முன்னதாகவே பொங்கல் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர். அதில் ஜாதி மத இன வேறுபாடுகள் இன்றி மகிழ்ச்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் ஆக வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஒரு சிலவற்றை இதில் காண்போம்.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் இளம் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான அச்சாங்கல், கயிறு இழுத்தல், ஆடு - புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, பரமபதம், பல்லாங்குழி, உறியடித்தல், பம்பரம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 




இந்த பாரம்பரிய போட்டிகளில் மாணவ - மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து மாணவ மாணவிகள் கைகளில் கரும்புகளுடன் பேரணியாக தருமபுரம் ஆதீன வளாகத்தை சுற்றி வந்தனர். இதேபோன்று மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில்  கொண்டாட்டப்பட்ட பொங்கல் விழாவில் கயிறு இழுத்தல், உறியடித்தல்  உள்ளிட்ட போட்டிகளுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடினர்.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த லட்சுமிபுரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இன்று பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் வீடுகளிலிருந்து அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். மாணவ மாணவிகள் கொண்டு வந்திருந்த பொருட்களை வைத்து பள்ளி விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து வெண்கலப் பானையில் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.  




தொடர்ந்து மாணவிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டி, மாணவ மாணவிகள் பங்கேற்ற உறியடித்தல் போட்டி மாணவிகளுக்கான ஸ்கிப்பிங் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பொங்கல் பொங்கி வரும் பொழுது நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மாணவ மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


மயிலாடுதுறை அருகே வெள்ளாலகரம் ஊராட்சி மற்றும் பொது அமைப்புகள் இணைந்து தமிழர் திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமில்  பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வெள்ளாலகரம் ஊராட்சியில், சேம்பர் ஆப் காமர்ஸ், வெள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கம், சர்வதேச ஒருங்கிணைந்த கலாம் பவுண்டேஷன் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து தமிழர் திருநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.




சர்வதேச ஒருங்கிணைந்த காலம் பவுண்டேஷன் ராகவேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், பொது மருத்துவம்,  இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த கொதிப்பு மற்றும் உணவு ஆலோசனை வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர்.