தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் விழா தஞ்சை எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எனவே, தை மாதம் முதல் நாளை தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.  புதிதாக விளைந்த அரிசியில் சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுக்கு உதவும் உத்தம நண்பனான மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் கணுப்பொங்கல். தமிழகத்தின் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.


இத்தகைய சிறப்பு மிக்க பாரம்பரியமான பொங்கல் திருவிழா தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.


இதில் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மேயர் சண். .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், நீலகண்டன், கவுன்சிலர்கள் உஷா, தமிழ்வாணன், அண்ணா. பிரகாஷ்‌ , ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மேலும் மும்மதத்தினரும் கலந்து கொண்டு சமத்துவத்தை நிலை நாட்டினர். விழாவில் பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகள், குதிரை, உழவு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதேபோல் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஜயா,   கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  


விழாவில், தமிழ்நாடு அரசு சிறப்பு டெல்லி பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் வரவேற்றார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நதியா நன்றி கூறினார்.  


விழாவின் நிறைவாக அனைத்துத்துறைச் சார்ந்த பேராசிரிய பெருமக்கள், மாணவர்கள், பொங்கல் வைத்து கதிரவனுக்கு வழிபாடு செய்து கலைவிழா நிகழ்த்தினர். சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம், ஏறு தழுவுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மருதுபாண்டியர் கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.


பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என  சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், பிரேம்நாத் பைரன். ஜாபர் அலி, கீர்த்திவாசன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், முத்துமேரி மைக்கேல்ராஜ், தேன்மொழி உதயகுமார், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.