தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாயிகள் எலி கிட்டி வைத்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் எலி கிட்டிக்கு பிற மாவட்டங்களிலும் நல்ல மவுசு உள்ளது.


குறுவை சாகுபடி முடிந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், கடந்த அக்டோபர் 10ம் தேதி அணை மூடப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்யும் மழை நீர் மட்டுமே காவிரியில் மிகக் குறைந்த அளவில் செல்கிறது. இருப்பினும் வடகிழக்கு பருவ மழையை நம்பி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2.96 லட்சம் ஏக்கரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பரப்பு குறைந்துள்ளது. போதிய அளவுக்கு மழை பெய்யாததால், சம்பா, தாளடி பயிர்களில் இலைசுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் பரவி வருகிறது. பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.




இந்நிலையில் சம்பா, தாளடி சாகுபடி பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் எலித் தொல்லையும் அதிகரித்துள்ளது. எலித் தொல்லை அதிகரிக்க பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக தற்போது மழை இல்லாததால் வயல்கள் காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எலிகளுக்கு கொண்டாட்டம் ஆகி உள்ளது. முன்பு வயல்களில் தென்னை மட்டைகளை வெட்டி பறவைகள் அமரும் இருக்கைகளாக விவசாயிகள் வயலில் நட்டு வைப்பர். இதில் இரவு நேரத்தில் ஆந்தை உட்பட பல பறவைகள் அமர்ந்து எலிகளை உணவாக்கிக் கொள்ளும். 


தற்போது ஒரு சில விவசாயிகள் மட்டுமே பறவைகள் அமர வயல்களில் தென்னை மட்டைகளை நட்டு வைக்கின்றனர். மேலும் உரம், பூச்சி கொல்லி மருந்து போன்றவற்றால் பாம்புகளும் அதிகளவில் பலியானதால் எலிகள் பெருக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சாகுபடி வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பிடிக்க கிட்டி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


செழிப்பாக பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில் எலித் தொல்லையால் அதிக சேதம் ஏற்படுகிறது. பயிர்களை எலிகள் துண்டித்து விடுவதால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எலித் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் கிட்டி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் எலி கிட்டிகளுக்கு பிற மாவட்டங்களிலும் அதிகளவில் மவுசு உள்ளது. இதனால் இந்த எலி கிட்டிகள் தயாரிப்பவர்கள் பிற மாவட்டங்களுக்கும் இதை விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த நவீனத்தை விஞ்சும் அளவிற்கு உள்ளது பழமையான தொழில்நுட்ப முறையான கிட்டி(பொறி) தான். தஞ்சாவூரில் மூங்கில் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கிட்டிகளை (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை பிடித்து அழிக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் கிட்டிகளில் அதிக எண்ணிக்கையில் எலிகள் சிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மூங்கில் மரத்தின் மூலம் செய்யப்பட்ட முக்கோணம் வடிவிலான இந்த கிட்டியை எளிமையான முறையில் தயாரிக்கின்றனர். ஆனால் வலுவான இந்த எலி கிட்டிகள் விளை நிலங்களில் 4 அடிக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் வயலுக்கு ஏற்றார்போல் பல்வேறு அடுக்குகளாக நட்டு வைத்து இதனை சுற்றி எலிகளுக்கு பிடித்தமான அரிசி, பொரி ஆகியவற்றை தூவுகின்றனர். இரவு நேரத்தில் பயிர்களை சேதப்படுத்த வரும் எலிகள் அரிசியை தின்னும் போ  கிட்டியில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால் பயிர்கள் சேதத்தில் இருந்து தப்புகின்றன. மின்சாரம் இல்லாத காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட இந்த கிட்டிகளுக்கு இன்றளவும் விவசாயிகள் மத்தியில் மவுசு குறையாமல் உள்ளது.


தற்போது மழையும், தொடர்ந்து மாலைநேரத்திலேயே கடும் பனியும் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் இந்த எலி கிட்டிகள் அவர்களின் வருத்தத்தை குறைத்து வருகிறது. பிடிக்கப்படும் எலிகளுக்கு தகுந்தார்போல் ரூ.10 முதல் எலி கிட்டிகள் வைப்பர்கள் வாங்குகின்றனர். தஞ்சை எலி கிட்டி தற்போது பல்வேறு மாவட்டகளிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளது.