கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக அந்நிய நாட்டினர் கடல்மார்க்கமாக ஊடுருவ கூடும் என உளவுத்துறை எச்சரித்தது. இந்த நிலையில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதாக  இதுவரை உறுதிப்படுத்தவில்லை. 
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் காற்று நிரப்பி நீரில் செல்லும் 14 அடி நீளம் உள்ள படகு  ஆளில்லாமல் கரை ஒதுங்கியுள்ளது.


 

 



 

அந்தப் படகில்  இரண்டு உயிர் கவச உடை , காற்றடிக்கும் பம்ப் ஒன்று, 16 தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்தன. தகவலறிந்த காவல்துறையினர் தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் , திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் ,கடலோரக் காவல்படையினர், கடற்படையினர், வனச்சரகர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நாகப்பட்டினத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து காட்டுப் பகுதி வரை சென்றது. இந்த ஆள் இல்லாத படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளா? கடத்தல்காரர்களா? அல்லது அகதிகளா?  எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடல் மார்க்கமாக வந்தவரை ட்ரோன் கேமரா மூலம்  கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.

 

போலந்து நாட்டை சேர்ந்த நபர்: 

 



 

இந்த நிலையில் கோடியக்காடு கடற்பகுதியில் இலங்கையின் மிதவை படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்ற 39 வயதான நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்பவர், சென்னை செல்ல வழி கேட்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்ததால், ஆற்காட்டுதுறை கிராம மக்கள் அந்த நபரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை நீதிமன்றம் அடிதடி வழக்கில் கைது செய்து அவரை சிறையில் அடைத்து பாஸ்போர்ட்டை முடக்கியது தெரிய வந்துள்ளது .இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த நபர் காற்று அடித்த ரப்பர் படகில் துடுப்பு போட்டு 36 மணி நேரம் கடலில் பயணித்து இந்திய கடல் எல்லை வழியாக கோடியக்காடு வந்ததும், அங்கிருந்து டெல்லி சென்று தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு அவர் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தார்.

 

புழல் சிறையில் அடைப்பு :

 



 

இது குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் கடலோர காவல்துறையினர், உளவுத்துறை, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இலங்கையிலிருந்து ரப்பர் படகுமூலம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டாவை வேதாரண்யம்  நகர காவல் நிலைய போலீசார் நாகை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த  மகிளா நீதிமன்ற  நீதிபதி தீபிகா வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் வாகன மூலம் சென்னை கொண்டு சென்று  அவரை புழல் சிறையில் அடைத்தனர்.