மதுபான பாட்டில்கள் விற்பனை:திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர்உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை மூடி கடைகளுக்கு சீல் வைத்து மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொது முடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், அதை முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு தனி நபரிடம் விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் துணைத் தலைவரிடம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமைக் காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை சரக டிஐஜி எச்சரித்துள்ளார். போலீசாரே காவல் நிலையத்தில் வைத்து மதுபானங்களை விற்றதும், அதற்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததும், இதுவரை நடைபெறாத நிகழ்வு. பிளாக்கில் விற்பவர்களை பிடித்து கைது செய்யும் போலீசார், அவற்றை பிளாக்கில் விற்றுள்ளனர். அவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.