விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி விநாயகர் சிலைகள் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்றாவது நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.




அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி 110 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்றே 110 விநாயகர் சிலைகளையும் கரைத்தனர். இந்தநிலையில்  தஞ்சை கீழவாசல் பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்ட அரை அடி, ஒரு அடி, 2 அடி உயர விநாயகர் சிலைகளை, அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர், கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வடவாறு பகுதியில் கரைக்கப்போவதாக இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் அறிவித்து இருந்தனர்.


அதன்படி ஒரு அடி மற்றும் அரை அடி  என 20 விநாயகர் சிலைகள், 2 அடி உயரமுள்ள 6 விநாயகர் சிலைகள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு இந்து அமைப்பை சேர்ந்த சந்தோஷ்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகளுடன் ஊர்வலமாக சென்றனர். சில அடி தூரம் சென்ற போதுஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாகசெல்ல அனுமதி கிடையாது என தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்போம் என கோஷமிட்டனர்.




ஆனாலும் போலீசார், தமிழக அரசு, விநாயகர் சிலைகளை ஊர்வலகமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்றி வைத்த விநாயகரை, ஊர்வலமாக எடுத்து செல்லாமல் ஆறுகளில் கரைத்துள்ளோம். அதனால் நீங்களும், ஊர்வலமாக செல்லாமல், விநாயகர் சிலைகளை எடுத்து சென்று கரைக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலைகளை தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களில் எடுத்துச்சென்று வடவாற்றில் கரைத்தனர். இதனால் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் போக்குவரத்து பாதித்து, சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.