நான் உளமார செய்த பிரார்த்தனை முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது
மணிப்பூர் மாநில மக்கள் கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் எனக்கு தஞ்சையில் இருப்பது போலவே தோன்றுகிறது
மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் பேட்டி
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்றுள்ள தஞ்சையை சேர்ந்த இல.கணேசன் தன் குடும்பத்துடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று மனமுருக சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக போலீசார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,
நான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் சுவாமிமலை சாமிநாதசாமி எங்களது குலதெய்வம். எத்தனை முறை சுவாமிமலை கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ளேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. எனக்காக உளமாற பிரார்த்தனை செய்ய ஒரு இடம் இருக்குமானால் அது சுவாமிமலை. எல்லா மனிதரைப் போல எனக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு. எனவே நான் உளமார செய்த பிரார்த்தனைகளுக்கு முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றிக்கடன் தெரிவிக்க கோவிலுக்கு வந்துள்ளேன்.
நூற்றுக்கணக்கான முறை தரிசித்து மகிழ்ந்த தஞ்சை பெரிய கோவில் அதனை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக வருவேன். என்னுடைய சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த மகாராஜபுரம் தான் அங்கு என்னுடைய கிராம தேவதை உள்ளார். அவரை தரிசனம் செய்ய உள்ளேன். நேற்று சென்னையில் துணைத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இருந்தது. அதில் பங்கேற்பதற்காக வந்தேன் தற்போது தொடர்ந்து சுவாமி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்.
மணிப்பூர் இயற்கையிலேயே அழகான இடம். பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து என்று அதனை அழைக்கிறார்கள். அருமையான இடம். பிரச்சினைகள் எதுவும் இல்லை. பக்கத்தில் பர்மா தான் எல்லையாக இருக்கிறது. பர்மா நட்பு நாடாக இருப்பதால், எந்தவிதமான பிரச்சனையில் இல்லை. அம்மாநில மக்கள் உழைப்பாளிகள். மிகவும் தொன்மையானவர்கள் குறிப்பாக கலையின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதனால் எனக்கு தஞ்சாவூரில் இருப்பது போலவே தோன்றுகிறது. அதனால் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து பந்தநல்லூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று விட்டார். தரிசனத்தின் போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் உடனிருந்தனர். ஆளுநர் வருகையையொட்டி சுவாமிமலை கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.