திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வியாபாரத்திற்காக 2019 ஆம் ஆண்டு அனுமதியில்லாமல் சணல் வெடிகுண்டு தயாரித்தபோது அங்கு சென்ற முத்துப்பேட்டை காவல்துறையினர், சணல் வெடிகுண்டுகள், வெடிக்க பயன்படுத்தும் திரி மற்றும் புஸ்வாணம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மண் குடுவை, ஒலக்கை வெடி ஆகியவை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை போலீசார் பாதுகாத்து வந்த நிலையில் அதனை செயலிழக்க செய்ய உயர் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 



 

அதன் அடிப்படையில் நேற்று முத்துப்பேட்டைக்கு வந்த திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் , முத்துப்பேட்டை ஆய்வாளர் அழகேசன் முன்னிலையில் பாதுக்காத்து வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களை எடுத்து சென்று முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலையோரம் உள்ள திடலில் பள்ளம் வெட்டி சுற்றிலும் மணல் மூட்டை அடுக்கி வைத்து பள்ளத்தில் வெடிபொருட்களை ஒன்றோரோடு ஒன்று திரி மூலம் இணைத்து அவற்றை வெடிக்க செய்தனர். அப்பொழுது நிலம் அதிர்வு ஏற்பட்டு டமார் என்ற பயங்கர சத்தத்துடன் புகை கிளம்பியது. 

 

இதற்காக அப்பகுதியில் பலத்த போலீசார் காவல் துறை பாதுக்காப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முத்துப்பேட்டை தீயணைப்பு வாகனமும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிகுண்டு விபத்து நடைபெற்றது போலவும், எந்த பகுதியில் நடந்தது என தெரியாமல் மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து சுற்றித்திரிந்து பார்த்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வதற்காக நடந்த நிகழ்வு என தெரிய வந்தது அதன் பின்னரே பொதுமக்கள் தங்களது அச்சத்தில் இருந்து மீண்டு வந்தனர் என அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.



 

அதே நேரத்தில் வெடிகுண்டு செயல் இழக்க செய்த பொழுது அந்த பகுதியாக வந்த ஒரு சில நபர்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு விபத்து நடந்தது போல பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். முற்றிலும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட சத்தமே தவிர மற்றபடி முத்துப்பேட்டை பகுதியில் எங்கும் வெடிகுண்டு வெடிக்க வில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.