தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, இரும்புத்தலை கிராமத்தில் 50 ஆண்டு கால கிராம கோயில், சாலை விரிவாக்கம் செய்தால் இடிபடும் என்பதால், கோயிலை பாதுகாக்கும் பொருட்டு, நவீன இயந்திரமான ஜாக்கி மூலம் இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் இரும்புத்தலை கிராமம் உள்ளது. இக்கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில், மக்களுக்கு ஊர் தெய்வமாக இருப்பதால், ஆண்டு தோறும் விமர்சையாக விழாக்கள், சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் செய்து வருவார்கள். இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலானதாலும், மிகவும் சிதிலமடைந்திருந்ததால், அக்கிராம மக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு, திருப்பணியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த மாரியம்மன் கோயிலின் கருவறை சாலையின் ஒரத்தில் இருப்பதால், பாபநாசம் -சாலியமங்கலம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து-கும்பகோணத்திற்கும், கும்பகோணத்திலிருந்து-தஞ்சாவூருக்கும் வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. அதனால் பகல் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகின்றது. இனி வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், இரும்புதலை கடைவீதி மற்றும் சாலை ஒரத்தில் மாரியம்மன் கோயில் இருப்பதால், கனரக வாகனங்கள் சென்று வரும் போது, நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூராகி விடுகிறது.
இதனால் அக்கிராம மக்கள், இனி வருங்காலத்தில், பாபநாசம்-சாலியமங்கலம் சாலையை அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்தால் மாரியம்மன் கோயிலின் கருவறை வரை இடிபட வாய்ப்புள்ளது. கோயிலின் கருவறை இடிபடாமல் பாதுகாக்க வேண்டும், போக்குவரத்துக்கும் இடையூர் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நோக்கத்தில், ஊர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில், மாரியம்மன் கோயிலை இடிக்காமல், கருவறையை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து, கும்பாபிஷேக திருப்பணியின் போது அதனை ஜாக்கி மூலம் அஸ்திவாரத்திலிருந்து 5 அடி உயரம் உயர்த்தியும், 21 அடி நீள தூரத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நவீன இயந்திரமான ஜாக்கி மூலம் கோயிலின் கருவறையை, நகர்த்தும் பணி தொடங்கியது. இதில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கட்டுமான வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி கூறுகையில், எங்களது ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்கியது. அதில் முதற்கட்டமாக கோயில் கோயில் கருவறையை இடமாற்றம் செய்து, பூமியிலிருந்து 5 அடி உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 லட்சம் செலவில் ஜாக்கிகளை கொண்டு நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணி இரண்டு நாட்களில் நிறைவடையும் தெரிகிறது. அதன்பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பத்ரகாளியம்மன் சன்னதியை இதே முறையில் இடமாற்றம் செய்ய உள்ளோம் என்றார்.