தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை போலீசாரே நேற்று ராஜாகோரி மயானத்தில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்.

Continues below advertisement

தஞ்சை மாநகரில் நகர கிழக்கு, மேற்கு, தெற்கு, கள்ளப்பெரம்பூர் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 13 பேரின் உடல்களை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உறவினர் வந்து உடலை அடையாளம் காட்டி பெற்று செல்வர்.  அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உடல்களை உரியவர்கள் வந்து தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோர வேண்டும்.  இல்லையெனில் இறந்தவர்களின் உடல்கள் ஆதரவற்ற சடலங்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும். அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உள்ள 13 உடல்களை ஆதரவு கோரி யாரும் வராததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் மாநகராட்சி ஆணையர்  கண்ணன், மாநகர் நகர அலுவலர் நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சந்திரா, சுகாதார ஆய்வாளர் வடிவேல், போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் அந்த 13 உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து 13 (11 ஆண், 2 பெண்) பேரின் உடல்களை அடக்கம் செய்ய இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட மருத்துவமனை நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து அந்த 13 பேரின் உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம் வடக்குவாசலில் உள்ள ராஜாகோரி மயானத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். பின்னர் அங்கு தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தனித்தனியாக குழிகள் தோண்டப்பட்டு, 13 உடல்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Continues below advertisement

காவல்துறை சார்பில் இதுவரை தஞ்சை மாநகரில் 74 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த பணிக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.