தஞ்சாவூர்: தஞ்சையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாலிதீன் பைகளுக்கு தடை அமல்படுத்துவது குறித்து வியாபாரிகளுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் மஞ்சள் பை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் பேரில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கான தடையை அமல்படுத்துவது குறித்து வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்த இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறைக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வேதா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை கவின் மிகு இயக்க நிறுவனர் ராதிகா மைக்கேல், தஞ்சை மாவட்ட வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பட்டறையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இயக்குனர்(பொறுப்பு) சந்தோஷ், பேராசிரியர் சுகுமார், தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை பேராசிரியர் (ஓய்வு) சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இதில் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் சீனிவாசன், தொழிலதிபர்கள் சுப்பிரமணியசர்மா, பாண்டுரங்கன் மற்றும் வணிகர் சங்க பேரவை உறுப்பினர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாலிதீன் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி மேலாளர் மோகன் நன்றி கூறினார்.
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, நச்சு இரசாயனங்கள் வெளியாதல், மண் மற்றும் நீர் மாசுபாடு, விலங்குகளின் உயிருக்கு ஆபத்து, மற்றும் மனித ஆரோக்கியத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படுதல் போன்ற தீமைகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் நீண்ட காலமாக அழியாமல் இருப்பதால், அது நம்முடைய சூழலியல் அமைப்பை சீர்குலைத்து, சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கையாக சிதைவதற்கு 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால் கழிவுகள் குவியும்போது ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும். பிளாஸ்டிக் உடையும்போது அல்லது வெப்பமடையும் போது, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன. இவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்தி, மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. வனவிலங்குகள் பிளாஸ்டிக் குப்பைகளில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது அவற்றை உணவு என நினைத்து உட்கொள்ளலாம். இதனால் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு இரசாயனங்கள், உணவு மற்றும் குடிநீர் வழியாக மனித உடலுக்குள் சென்று, அறியப்படாத பல்வேறு நோய்களை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக்கின் அதிகப்படியான உற்பத்தி மற்றும் பயன்பாடு, கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவது போன்ற சவால்களை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பாலிதீன் பொருட்களை பயன்படுத்தாமல் தடுக்க வேண்டி வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும், பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.