மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமம் ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த அப்துல் உசேன் என்பவரின் மனைவி 30 வயதான உம்மர்கனி என்பவரின் வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் அதற்குரிய வயரிங் பணியை செய்து முடித்துவிட்டு மின் இணைப்பு வேண்டி கொள்ளிடம் மின்சார வாரிய அலுவலகத்துக்கு  மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.




இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம நபர் டிவிஎஸ் சூப்பர் இருசக்கர வாகனத்தில் பல மீட்டர் பெட்டிகளுடன் தைக்காலில் உள்ள உம்மர்கனி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் என்று  அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் தங்கள் விண்ணப்பித்துள்ள மின் இணைப்பு வழங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பிய உம்மர்கனி மின் இணைப்பு கொடுக்க சம்மதித்துள்ளார். 




உடனே அந்த மர்ம நபர் எடுத்துவந்த பல மீட்டர் பெட்டிகளில் ஒரு புதிய மீட்டர் பெட்டியை எடுத்து வீட்டில் பொருத்தி மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பையும் வழங்கியுள்ளார். அதில் ஆர்.எஸ், எஸ் சி14 45 என்றும், 17.2.22 என்ற தேதியையும் குறிப்பிட்டார். பின்னர் மின் இணைப்புக்கான கட்டணமாக 3,920 ரூபாயை  உம்மர்கனியிடம் இருந்து ரொக்கமாக கேட்டு வாங்கிக்கொண்டு அவர் எடுத்து வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.



இந்நிலையில் இதுகுறித்து அந்த பகுதி மின் ஊழியருக்கு தெரிய வர அவர் அளித்த  தகவலின் பேரில் சீர்காழி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (வடக்கு) விசுவநாதன் உத்தரவின்பேரில் கொள்ளிடம் மின்வாரிய உதவி பொறியாளர் மாரிமுத்து, வருவாய் மேற்பார்வையாளர் மணி, கணக்கீட்டு ஆய்வாளர் திருலோகச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் தைக்காலில் உள்ள உம்மர்கனி வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்ததில் போலியாக ஒரு மர்ம நபர் வந்து மின்சார வாரிய ஊழியர் என்று கூறி மின்இணைப்பு கொடுத்தது தெரியவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து உடனே அதிகாரிகள், மர்ம நபர் கொடுத்திருந்தமின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் இதுகுறித்து கொள்ளிடம் மின்சார வாரிய உதவி பொறியாளர் மாரிமுத்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட ஆணைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதாராணி, உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலியாக மின் மீட்டர் பொருத்தி மின்சார இணைப்பு வழங்கிய மர்ம நபரை  தேடி வருகின்றனர்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒருவர் மின் இணைப்புக்கு மின்சார வாரியத்தில் விண்ணப்பம் செய்துள்ள தகவல் தனிநபருக்கு தெரிந்திருக்கிறது என்றால், நிச்சயம் இதற்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் பணி வரும் நபர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனை உரிய முறையில் விசாரணை செய்தேன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.