தஞ்சை மாநகராட்சி 20 வது வார்டில், மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் 488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் பெரியசாமி சந்திரன் 474 வாக்குகள் பெற்று, 14 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இந்த வார்டு பகுதி, தஞ்சாவூர் தொகுதி எம்.பி., எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வசிக்கும் வார்டு பகுதிக்குள்ளாக வருவதால், தி.மு.க., வேட்பாளர் தோல்வியானது கட்சியினரிடம் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  


தி.மு.க.,விற்கு எதிராக சுயேட்சையாக 3 வார்டுகளில் களமிறங்கிய  குடும்பத்தில் மனைவி வெற்றி பெற்றார்.  மறைந்த முதல்வர் கருணாநிதியின் நண்பரும், முன்னாள் கவுன்சிலராமான சீனிவாசன் மகன் செல்வகுமார் கடந்த 2011-16 ஆம் ஆண்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு கவுன்சிலரானார். இவர் இம்முறை தனது பகுதிக்குட்பட்ட வார்டுகள் மறு சீரமைப்பில், 3 வார்டுகளாக பிரிக்கப்பட்டதால், 3 வார்டுகளில் ஒரு வார்டில் போட்டியிட தி.மு.க., தலைமையிடம் சீட் கேட்டார். ஆனால், சீட் வழங்கவில்லை. இதனால் 32 வது வார்டில் செல்வகுமாரும், அவரது மனைவி வனிதா 33 வார்டிலும், அவரது மகன் சக்கரவர்த்தி 34 வார்டிலும் தி.மு.க., எதிராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் சக்கரவர்த்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து 32 மற்றும் 33 வார்டுகளில் கணவன்,மனைவி இருவரும் தேர்தலை சந்தித்தனர். இதில் செல்வகுமார் தோல்வியை சந்தித்தார். ஆனால் 33 வது வார்டில் போட்டியிட அவரது மனைவி வனிதா 1100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் தி.மு.க. வேட்பாளர் 720 வாக்கு பெற்று தோல்வியை சந்தித்தார்.




தஞ்சாவூர் மாநகராட்சியில் 31 வார்டில் போட்டியிட்ட பா.ஜ., தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் ஜெய்சதீஸ், 1,221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது வார்டில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் 1010 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். முதன் முறையாக பா.ஜ., மாநகராட்சியில் கால்பதித்துள்ளது. 


தஞ்சாவூர் மாநகராட்சி 51வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர் அஞ்சுகம்பூபதி. இவருக்கு பிரச்சாரத்தின் போது பிரசவலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தன் மகள் வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்தார். பின்னர் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வந்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில்  தேர்தல் முடிவுகளில் அஞ்சுகம் 1,673 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் உள்ளிட்ட 5 பேரும் டெப்பாசீட் இழந்துள்ளனர். இதனால் மகன் பிறந்த யோகம் என அஞ்சுகம்பூபதி உற்சாகமடைந்தார்.


தஞ்சை மாநகராட்சி 11-வது வார்டில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இவர் தனது சகோதரர்களுடன் தஞ்சை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே பட்டாணி, அவல், பொரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஊழியர்கள் பிரதீப், ஜெயராம் ஆகிய 2 பேர் மட்டும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்து, கடையில் இருந்தவர்களை திட்டியவாறு அங்கிருந்த பட்டாணி, நிலக்கடலை, அவல், பொரி ஆகியவற்றை கடைக்குள் கொட்டியும், வெளியே கொட்டியும் சூறையாடினர்.




இந்த சம்பவத்தை 3 பேர் செய்த நிலையில், 2 பேர் அருகில் நின்று அதனை வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த கடையில் வேலை பார்த்த ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் தெரிவிப்பதற்காக போனை எடுத்த போது அவர்களை தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து தஞ்சை நகர கிழக்குப்போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியை அதிமுகவிடமிருந்து, திமுக கைப்பற்றி உள்ளது. இதில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக 34 வார்டுகளிலும்,காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 வார்டிலும், சிபிஎம் 1 வார்டிலும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 1 என 40 இடங்களிலும், அதிமுக 7, பாஜக 1, அமமுக 1, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


இந்நிலையில் திமுகவை சேர்ந்த அஞ்சுகம்பூபதி, சண்ராமநாதன், சந்திரசேகர மேத்தா உள்ளிட்டோர் மேயர் பதவி கேட்கின்றனர். ஆனால் அஞ்சுகம்பூபதி, தான் பார்த்த அரசு மருத்துவர் பணியை விட்டு விட்டு, எம்எல்ஏ தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது திமுகவை சேர்ந்தவர்களின் உள்கட்சி பூசலால் தோல்வி அடைந்தார். தற்போது மாவட்ட மருத்துவரணி அமைப்பாளராக இருக்கும் அஞ்சுகம்பூபதி, தனது கணவர் வெற்றி, திராவிட கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். அஞ்சுகம்பூபதியின் கட்சி பணியறிந்து திமுக தலைமை, மேயர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




இதே போல் சண்ராமநாதனுக்கும், எம்எல்ஏ நீலமேகத்திற்கும் ஒத்துபோகாது. சண்ராமநாதன் மேயரானால், தனது செல்வாக்கு சரிந்து விடுமோ என்ற அச்சத்தில் எம்எல்ஏ நீலமேகம், மேயராக்க விடமாட்டார். இதே போல் சந்திரசேகரமேத்தாவிற்கும், எம்பி பழநிமாணிக்கத்திற்கும் ஆகாது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை, கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதியின் சிலையை திறப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, டிஆர்பி ராஜாவை பார்ப்பதற்காக, சந்திரசேகர மேத்தா, மேடை பகுதிக்கு சென்றார். இதனையறிந்த எம்பி பழநிமாணிக்கம், வேகமாக தன் துண்டை எடுத்து வேகமாக தனது தோளில் போட்டு கொண்டு, சாதாரண மக்கள் இருக்கும் பகுதிக்கு விரட்டியடித்தார்.




இதற்கிடையில் 1 வது வார்டு உறுப்பினர் செந்தமிழ்செல்வன், அமைதியாக, மாவட்ட செயலாளர் சந்திரகேகரனை வைத்தும், சென்னையிலுள்ள உறவினர்களை வைத்து, மேயராவதற்கு முயற்சி செய்து வருகின்றார். ஆனால் துணை மேயராவது ஆவார் என கூறப்படுகிறது.தஞ்சை திமுகவில் எந்த விதமான கட்சி பூசலில் இல்லாமல் உள்ள அஞ்சகம் பூபதிக்கு மேயராக வாய்ப்புள்ளது. தஞ்சையில் திமுக மூன்று பிரிவாக உள்ளதால், கட்சி தலைமை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.