தஞ்சை மண்டலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 10,000 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்கத் திட்டம்

மீட்கப்படும் நிலங்களை மீண்டும் குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கோயிலுக்கு வருவாயை பெருக்க நடவடிக்கை

Continues below advertisement

பிரமன் சிரத்தைத் தம் சூலத்தால் கண்டனம் செய்த காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில்  இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு. அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.சூரியன் வழிபட்டதலமாதலின், மாசி மாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5.45 மணிமுதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

Continues below advertisement

சப்தஸ்தானத் திருவிழாவில்  சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.  நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.  மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது. பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.  இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது. பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.


திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சாவூர் மாவட்டம்,  கண்டியூரிலுள்ள  பிரம்மசிர கண்டீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலமான 3 ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில், திருவையாறு – தஞ்சாவூர் சாலையில் கண்டியூரில் உள்ளது.

இந்நிலத்தை பயன்பாட்டில் வைத்திருந்த குத்தகைதாரர், கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை செலுத்தாததால், கோயில் நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம், கோயில் நிலத்தை மீட்க தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின்படி,  வருவாய் நீதிமன்ற அமலாக்க தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இந்து சமயஅறநிலைத் துறை உதவி ஆணையர்  சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில், ரூ. 2 கோடி மதிப்பிலான நன்செய் நிலத்தை சுவாதீனம் செய்து, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, நில  அளவையர் கஸ்தூரி, கோயில் செயல் அலுவலர் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர.


பின்னர் உதவி ஆணையர்  சிவராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,  இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை, தனியார்கள் ஆக்ரமிப்பு செய்து, நிலங்களை ஒப்படைக்காமலும், சாகுபடி செய்து வரும் நிலத்துக்கு முறையான குத்தகையை செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலங்களை மீட்டு, கோயிலுக்கு வருமானத்தை பெருக்கும் விதமாக, தஞ்சாவூர் மண்டலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான கோயில் நிலங்கள் மீட்க அளவீடு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்படும் நிலங்களை மீண்டும் குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கோயிலுக்கு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola