மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதி படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின்  முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து முழுமையாக இங்கு செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும்  இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.




அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக உருவாகி வருகிறது. அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து சாலை அமைப்பது உள்புற வடிவமைப்புகள், வர்ணம் பூசுவது பூசுவது உள்ளிட்ட இறுதி கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.




மேலும் வளாகத்திற்கு உள்ளேயே பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை தனியாக கட்டப்பட்டு வருகிறது. மழைநீர்  சேகரிப்புக்காக பிரம்மாண்டமான வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டு அவை அருகில் உள்ள குளங்களுக்கு சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றி உள்ள சாலைகள் அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்தப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்று தெரிய வருகிறது. இந்நிலையில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாயூரநாதர் கோயில் அருகே செயல்பட்டு வருகிறது. அங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டரங்கில் 150 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.




அதில் பெரும்பாலும் அனைத்துதுறை அதிகாரிகள் அமர்வதால் பொதுமக்கள் அமருவதற்கு இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் காத்திருக்கும் வகையில் கூட்டரங்கு பக்கவாட்டில் நிழல் தரும் தகர ஷீட்டால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. இந்த சூழலில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி தாலுக்கா பகுதிகளில் இருந்து 288 மனுக்கள்’ பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். பெரும்பாலான பொதுமக்கள் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர்ந்து மனு அளிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து மனு அளித்து சென்றனர். 




மேலும் நகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் கடந்த காலங்களில் டம்ளர் இல்லாமல் தண்ணீர் குடிக்க கூட பொதுமக்கள் திண்டாட வேண்டிய நிலைவியது. தற்போது குடிநீர் தொட்டியில் தண்ணீர் இன்றி பொதுமக்கள் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதி அடைந்தனர். கழிவறை சுகாதர மற்ற முறையில் உள்ளதால் பொதுமக்கள் நோய் தொற்று ஏற்படும் என அச்சத்துடன்  பயன்படுத்தினர்‌. குறைதீர் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளதால் போதிய இருக்கை வசதி செய்து குடிநீர் தொட்டியில் குடிக்க டம்ளர், தண்ணீர் வைக்கவும், கழிப்பிடத்தை தூய்மைபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.